Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு! - Thiru Quran Malar

ஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு!

Share this Article

கல்வியில், தொழிலில், வணிகத்தில் உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்கள், அரிய சாதனைகளைப் படைத்தவர்கள் அல்லது உயர்பதவி அடைந்த ஆளுமைகள் அந்நிலையில் திடீரேன தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்வது என்பது எவ்வளவு நாசகரமான செயல்!

சமீபத்தில் ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் தலைவர் சங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்’ என்ற செய்தியை கவனியுங்கள்.
இந்தியாவெங்கும் கலெக்டர்களாகவும், போலீஸ் கமிஷனர்களாகவும், எஸ் பிக்களாகவும், வெளியுறவுத்துறை செயலர்களாகவும் இருப்பவர்களில் பல பேர் இவரிடம் பாடம் பெற்றவர்கள்.

இது ஒரு ஒற்றை நிகழ்வு என்று நாம் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம்  தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் தற்கொலை செய்கிறார்கள். அவற்றுள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதும் அதிர்ச்சித் தகவல்.
 பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள் வரை அவர்களில் அடங்குவர்.

 தற்கொலை செய்துகொள்ளும் நபரைப் பொறுத்தவரையில் அவர் எதையுமே இழப்பதில்லை என்று அவர் கருதலாம். ஆனால் அந்த ஒரு  ஆளுமையை உருவாக்க வேண்டி அவ்வளவு காலம் இரவுபகலாக உழைத்த பெற்றோர்கள் சந்திக்கும் அதிர்ச்சியை அல்லது இழப்பை அவ்வளவு இலேசாக எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க அதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

தற்கொலை உணர்வு:

தோல்விகள் அல்லது இழப்புக்கள் அல்லது அவமானங்கள் வரும்போது தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வு, மனிதனில் நிராசையையும் விரக்தியையும் தூண்டும் காரணியாகும்.

தொடர்ந்து வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்வும் தன் வாழ்வை முடித்துக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் என்ற அறியாமை உணர்வும் எல்லாம் சேர்ந்து தற்கொலைகளாக அரங்கேறுகின்றன.  ஆனால் அதேவேளையில் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை மனிதனுக்கு நினைவூட்டினால் அவனுள் தற்கொலை உணர்வே எழாமல் பாதுகாக்கலாம். 

படைத்தவனையும் அவன் நெருக்கத்தையும் அறிதல் 

நம்மை இவ்வளவு பக்குவமாக படைத்ததோடு நில்லாமல் நம்மை சற்றும் கைவிடாமல் அயராது பரிபாலித்து வரும் அவனது இறைவனைப் பற்றிய அறியாமையே நமக்குத் துணையாக யாரும் இல்லையே என்ற உணர்வுக்குக் காரணம். 

இறைவனைப்பற்றிய தவறான கருத்துக்கள் 

ஒருபுறம் இறைவனே இல்லை என்று சொல்லும் நாத்திகமும் மறுபுறம் இறைவன் அல்லாத அற்பமான படைப்பினங்களைக் காட்டி அவைகளே கடவுள்கள் என்ற தவறான சித்தரிப்பும் இறைவனைப் பற்றிய அறியாமையை மக்களிடையே வளர்க்கின்றன.

பகுத்தறிவை பயன்படுத்தி நம்மைப் பற்றியும் நமது நிலையைக் குறித்தும் சற்று சிந்தித்தால் மட்டுமே இந்த அறியாமை விலகும். இல்லாமையில் இருந்து இபேரண்டத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அந்த சர்வவல்லமையும் நுண்ணறிவும் அளவற்ற ஆற்றல்களும் கொண்டவனையே இறைவன் அல்லது ‘அல்லாஹ்’ என்கிறது இஸ்லாம்.  மாறாக மனிதர்கள் சித்தரித்து உருவம் கொடுக்கும் அளவுக்கு அற்பமானவல்ல இறைவன் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 

நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள உடல் என்ற பேரற்புதமும் நம்மைச்சூழ்ந்து நிற்கும் இந்தப் பேரண்டம் என்ற அற்புதமும் தானாகவோ தற்செயலாகவோ தோன்றவும் முடியாது. தானாகவோ தற்செயலாகவோ அதி பக்குவமான முறையில் இயங்கவோ முடியாது என்கிறது பகுத்தறிவு!

இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு உரக்கவே எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.

இந்த விசாலமான பிரபஞ்சமும் அது உட்கொண்டுள்ளவற்றின் பேரமைப்பும் நமது உடல் என்ற அற்புதமும் இவற்றின் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

= நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164) 

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)

= . நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28) 

அந்த இறைவன் எப்படிப்பட்டவன்? 

அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

= கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (திருக்குர்ஆன் 112 :1-4) 
(அல்லாஹ் என்ற அரபுச்சொல்லுக்கு ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதுதான் பொருள்)

அதாவது நம்மைப் படைத்த இறைவன் அவனது படைப்பினங்களைப் போலல்லாது ஏகனாகவும் தனித்தவனாகவும் தேவைகள் ஏதும் இல்லாதவனாகவும் உள்ளான். படைப்பினங்களைப் போல பெற்றோரும் பிள்ளைகளும் உறவினரும் இல்லாதவனாக உள்ளான். ஆதியும் அந்தமும் இல்லாமல் என்றென்றும் நிலைத்திருப்பவனாகவும் தன்னிகரற்றவனாகவும் உள்ளான்.

இறைவனின் நெருக்கத்தை உணருதல் 

ஆம் அன்பர்களே, அந்த தன்னிகரற்ற சர்வவல்லமை கொண்ட இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்று நமக்கு உதவக் காத்திருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? இதோ இறைமறைக் குர்ஆனில் அவன் கூறுவதைக் காணீர்:

= நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50:16) 

= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186) 

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு நெருக்கத்தில் இருக்கிறான், நம் அழைப்பை ஏற்கக் காத்திருக்கிறான் என்ற ஆழமான புரிதல் யாருக்காவது உண்டாகிவிட்டால் அந்த மனிதனின் ஆளுமைக்கு மிக உறுதியான அஸ்திவாரம் அமைகிறது. அவனுக்குள் நிராசையும் மனச் சோர்வும் ஏற்பட வழியே இல்லை.

மேற்படி இறைநம்பிக்கையோடு இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும்போது வாழ்க்கையில் கட்டுப்பாடும் (discipline) அமைதியும் உண்டாகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டோடு வாழ்ந்ததற்காக மறுமை வாழ்வில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பமும் நித்திய வாழ்வும் பரிசாகக் கிடைக்கிறது. 

 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

Share this Article

Add a Comment

Your email address will not be published.