ஆறடி மனிதா உன் விலையென்ன?
அமெரிக்க நகரம் ஒன்றில் அன்று ஒரு கருத்தரங்கு…
“தூய்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்க இறைவன், மதம் ஆகியவற்றின் அவசியம்” என்னும் தலைப்பில் ஒரு பாதிரியார் மாணவர்களிடம் உரையற்றிக் கொண்டிருந்தார்.
துடிப்புள்ள ஒரு மாணவன் எழுந்து பின்வரும் கேள்வியை வீசினான், “ஐயா, நான் ‘மதச்சார்பற்ற மனிதத்தன்மை’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். மனித குலத்துக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். எல்லா விதமான தீமைகளிருந்தும் விலகி நிற்கின்றேன்;
எவருக்கும் தொல்லை கொடுபதில்லை; யாரையும் மோசடி செய்வதில்லை; பொய்யுரைபதில்லை; திருடுவதில்லை; இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன், பலவீனமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேன், சுருக்கமாகக் கூறினால் நன்மையை விரும்புகிறேன்; தீமையை வெறுக்கிறேன்; நற்செயல்களைப் புரிய, தீமைகளைத் தடுக்க, மனிதர்களிடம் உயர்ந்த பண்புகளை தோற்றுவிக்க, ஒரு சிறந்த தூய்மையான சமுதாயத்தை உருவாக்க என்னுடைய நடைமுறையும், கொள்கையும் போதுமானவையாகும். இதற்காகக் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
மாணவனின் இக்கேள்விக்கு பாதிரியார் பல பதில்கள் தந்தார். இறைவன் இருக்கிறான் என்பதைப் பற்றியும், அவன் மீது திடமான நம்பிக்கை கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பல ஆதாரங்களை எடுத்துரைத்தார். ஆயினும் பாதிரியார் கூறிய பின்வரும் உவமானம் மிகவும் சிந்தனைக்குரியதாக அமைந்தது:
இரண்டாம் உலகப் போரின்போது பனாமாக் கால்வாயின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்குப் பருத்தி போககூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது.
அங்கு சாவடிகளையும் அமைத்து, இந்தத் தடையை யாரும் மீறாதிருக்க அதிகாரிகளையும் நியமித்திருந்தது.
வடபகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த பருத்தி தடை செய்யப்பட்டு விட்டதால் , தென்பகுதியில் பருத்தியின் விலை கிடுகிடுவென பலமடங்கு உயர்ந்து விட்டது. பனாமாக் கால்வாயின் இருபகுதியுலும் பருத்தியின் விலையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதைப் பார்த்த சில வியாபாரிகளுக்கு பேராசை உண்டாயிற்று.
‘திருட்டுத்தனமாகப் பருத்தியைப் பனாமாக் கால்வாய் வழியாக கடத்திச் செல்லலாம்; அரசு அதிகாரிகள் பிடித்தால் இலஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்’ என்று அவ்வியாபாரிகள் திட்டமிட்டனர்.
திட்டத்தின்படி வியாபாரிகளின் ஒரு குழு படகில் பருத்தியை ஏற்றிக்கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றது. இந்தக் குழு சோதனைச் சாவடியை நெருங்கியது, அதிகாரிகளிடம் பேசி விவகாரத்தை முடித்துக் கொள்ள சாவடிக்குள் வியாபாரிகள் சென்றனர்.
அப்பொழுது அங்கு நியமிக்கப்படிருந்த அதிகாரி மிகவும் நேர்மையானவர்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்; வாய்மையுடன் சட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்; அதை நடைமுறையுலும் பின்பற்றுபவர்.
வியாபாரிகள் அவரைச் சந்தித்து “ நாங்கள் இவ்வழியில் தடை விதித்திருப்பதை அறியாமல் பருத்தியைக் கொண்டுவந்து விட்டோம்; இதை எடுத்துச் செல்ல அனுமதி தாருங்கள்” என்று கெஞ்சினார்கள்.
“கண்டிப்பாக அனுமதியளிக்க முடியாது!” என்று அதிகாரி பதில் கூறிவிட்டார் .
பிறகு அவர்கள் அதிகாரிக்கு ‘ஏதேனும்’ தருவதாக ஆசைகாட்டினார்கள். ஆனால் தங்களின் இம்முயற்சிகள் பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர்கள் பேரம் பேசத் தொடங்கினார்கள். ஏலத்தில் விலை குறிப்பதைப் போல அவர்கள் படிப்படியாக பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.
பேரம் மேலும் சூடு பிடித்தது.
6000, 10,000, 20,000, 40,000 என்று பேரம் தொடர்ந்தது. அதிகாரி கண்டிப்பு காட்டக் காட்ட , ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பேரம் ஏறிக் கொண்டே சென்றது . 5௦,௦௦௦ டாலர்கள் தருகிறோம் என்றார்கள். வியாபாரி ஒருவர் துணிந்து, ஒரு இலட்சம் டாலர் தருவதாக ஒரேயடியாகத் தாவி விட்டார் .
மனப்போராட்டம்
இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியின் உணர்ச்சிகள் பொங்கின; பலவிதமான சிந்தனைகள் அவர் உள்ளத்தில் உதித்தன . “வாழ்நாள் முழுவதும் நேர்மையில் நிலைதிருந்தாய்; சட்டத்துக்கு உட்பட்டிருந்தாய்! இன்று அந்தத் தூய வழிமுறையைக் கைவிட்டு விடப் போகிறாயா?” என்று அவர் மனசாட்சி இடித்துரைத்தது.
“இன்று உன்னுடைய ஊதியம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்!
இப்பொழுது உன்னை எந்த மேலதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார்? “சரி” என்று ஒரு வார்த்தை சொல்லி இலட்சம் டாலர்களின் உரிமையாளனாக மாறி விடு. அது மட்டுமல்ல , நாளை மேலும் பல வாய்புகள் வரலாம். உன்னுடைய கையில் மேலும் செல்வம் குவிந்து கொண்டே வரும்! அந்தச் செல்வமோ மிக அதிகமாகும். கற்பனையிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு செல்வம் உன் காலடியில் வந்து விழும்.
உன் வாழ்நாள் முழுவதும் நீ சம்பாதிக்கும் வருமானத்தை விட, பல மடங்கு அதிகமான இந்தத் தொகையைச் சில வினாடிகளில், சில நாட்களில் நீ அடைந்து விடலாம். வறட்டுத் தத்துவத்தில் உழலாதே; இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடாதே!” என்று பல ஆசைகளைக் காட்டி அவருடைய மன இச்சைகளும் ஷைத்தானும் அவரை மயக்கி மறுதிசையில் இழுத்தன.
இவ்வாறு மனசாட்சிக்கும் மன இச்சைக்கும் இடையில் அவரின் உள்ளத்தில் கடும் போர் நிகழ்ந்தது. அவருடைய மூச்சு திணறத் தொடங்கியது. “பாவிகளே, நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று முழங்கிக் கொண்டே வியாபாரிகளை அறையிலிருந்து வெளியே தள்ளிக் கதவுகளை ஓங்கி அடைத்துவிட்டார் அந்த அதிகாரி.
இதைச் சொல்லிய பாதிரியார் , மதசார்பற்ற மனிதத்தன்மையில் நம்பிக்கை கொண்டு கேள்வி கேட்ட அந்த மாணவரை நோக்கிப் பின்வருமாறு கூறினார் :
“நேர்மையான , சட்டத்துக்குட்பட்ட அதிகாரியின் நாவு முழங்கிய வாக்கியங்களைக் கவனித்தீர்களா? ‘ நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே’.
மனிதன் எத்துணை வாய்மையான பண்புகளைக் கொண்டவனாயிருந்தாலும் சரியே – ஓர் எல்லையைக் கடக்கும் போது அவனுக்கும் ஒரு “விலை” ஏற்படுகிறது. குறிப்பாக கொடுக்கப்படும் விலை அவனுடைய தகுதிக்கு அதிகமாக இருந்தால் அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் புயல் தோன்றுகிறது; மயக்கத்தினால் தலைசுற்றித் தொடங்குகிறது. இதற்கு நேர்மாறாக, இறைவன் மீது திடமான நம்பிக்கை கொண்டபின், இறை உவப்பைப் பெறுவதே தனக்குரிய விலை என்று மனிதன் கண்டு கொண்டுவிட்டால் படைத்தவனைத் தவிர படைப்பினங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து முயன்றாலும் இந்த விலையை வழங்க முடியாது.
எனவேதான் #இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைக்கும் மனிதனை விலைக்கு வாங்க எந்தப் படைப்பினங்களாலும் முடியாது!.
அவனுடைய விலையை நிர்ணயிப்பதற்கு எந்தப் படைப்பினத்திற்கும் வலிமையில்லை. உண்மையான இறை நம்பிக்கையாளன் எப்பொழுதும் விற்கப்படுவதில்லை.
ஊழலின் நிழல் அவன் மீது சிறிதும் படுவதில்லை . நேர்மை நீதி ஆகியவற்றின் மீது உறுதியாக நிலைத்து நிற்க , படைப்பினங்களைவிட, மேன்மை வாய்ந்த , வலிமை வாய்ந்த , மிக உன்னதமான, உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஓர் இறைவன் மீது திடமான நம்பிக்கை கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்”.
ஆக்கம்: ஷிஹாப்