ஆணாதிக்கத்திற்கு தடைபோடும் பர்தா!
ஆணாதிக்க அபாயம்
ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தேவைகளை அநியாயமாக நிறைவேற்றிக் கொள்வதையே ஆணாதிக்கம் என்கிறோம். இந்த ஆணாதிக்க செயல்பாடுகள் பல இருந்தாலும் அவற்றில் மிக மிக மோசமான பாதகங்களை ஏற்படுத்தக்கூடிய செயல் பெண்ணின் கற்ப்பை சூறையாடும் செயல் எதுவோ அதுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!
அவளது வாழ்வையும் மானத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கும் கொடூரமான ஆணாதிக்க செயல்பாடு அது! இக்கொடூரத்தில் இருந்து பெண்களைக் காக்கும் அரணாக #ஹிஜாப் குறுக்கே வரும்போது அது அக்கொடூரத்தை நிகழ்த்துபவர்களாலும் அதற்குத் துணைபோகும் நபர்களாலும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது!
பெண்களின் உடலை விளம்பர மற்றும் வியாபாரச் சரக்காக்கி தங்கள் சுயநல வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஆண்களும் அதற்கு துணைபோகும் பெண்களும் பெண்ணடிமைத்தனத்தையே வளர்த்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை! பெண்ணியம் என்ற பெயரில் உடைகளைக் களைவதுதான் பெண்விடுதலை என்ற மாயையை உண்டாக்கி பெரும்பாலானோரை வழிகெடுக்கவும் செய்து வந்தனர். இம்மாயையில் ஏமாந்த பெண்கள் அநியாயமாக அந்நியனின் கருவை கற்பத்தில் சுமந்தார்கள்.
சுமந்த கருவை கொன்றொழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். மீறிப் பிறந்தவற்றை தந்தைகளின்றி வளர்க்கும் நிலைக்கு ஆளானார்கள். உடல் ரீதியாக அனுபவிக்கும் வலிகளுக்கும் உளைச்சலுக்கும் அப்பால் சமூகத்தின் ஏச்சும் பேச்சும்,அவமானமும் இவர்களை அலைகழித்தது. … மன உளைச்சல்,கண்ணீர், விரக்தி, நிராசை, தற்கொலை என அனைத்தும் அரங்கேறின, இன்னும் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ….. எல்லாம் எதனால்? ஆம், இந்த ஆணாதிக்க வஞ்சகத்தில் அநியாயமாக அகப்பட்ட காரணத்தால்!
ஆனால் உண்மையில் பெண்ணை இந்த ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து காப்பாற்ற அவளைப் படைத்த அவளது உணர்வுகளை நன்கறிந்த அவளது நலனில் பேரார்வம் கொண்ட அவளது இரட்சகன் அவளுக்கு பரிந்துரைக்கும் பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம். பெண்ணுக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு முழு சமூகத்தையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது என்பதை சிந்திப்போர் அறியலாம்!
பெண்மையின் புனிதம்
மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நன்மை, தீமை, நியாயம், அநியாயம், சக மனிதர்களோடு கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற பலவும் அங்கு கற்பிக்கப்பட்டால்தான் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
இங்கு தந்தையை விட தாயின் தாக்கமே மிக அதிகம் என்பதை நாம் அறிவோம். இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில் இருந்து அவள் திசைதிருப்பப்பட்டால் அங்கு நடைபெறும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மேலும் சமூகத்தில் ஆண் பெண் இரு பாலாரும் கல்வி, தொழில், வணிகம் போன்ற விடயங்களில் அன்றாடம் கலந்துறவாடுவது என்பது தவிர்க்க முடியாததாகும்.
அப்போது அவர்களுக்கு இடையே அமைந்த பரஸ்பர கவர்ச்சி அவர்களின் செயல்பாட்டில் இருந்து திசை திருப்பாமல் இருப்பது முக்கியமாகும். இவைபோன்ற பல விடயங்களையும் கருத்திற்கொண்டே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஹிஜாப் என்றால் என்ன? எதற்கு?
தாய்மை என்ற உலகிலேயே உயர்ந்த விலைமதிக்கமுடியாத பதவியை அவளுக்கு வழங்குவதற்காகவும் அப்பதவியை அவள் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவும் அதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை சமைத்திடவும் அடித்தளமிடுவதே ஹிஜாப்!
#ஹிஜாப் என்னும் அரபிச் சொல்லுக்கு திரை, தடுப்பு என்று பொருள்படும். ஹிஜாப் பற்றி #அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது…
‘ (நபியே ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக )வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தமது முக்காடுகளை (நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்துக்) கொள்ளட்டும்’ (அல்குர்ஆன் 24:31)
மேலும் ஒரு வசனத்தில் குறிப்பிடும் போது…
‘நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக !அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும் (அல்குர்ஆன் 33.59)
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்க்கைக்கு ஏற்றவாறு அந்நிய ஆண்கள் அல்லது பெண்களின் முன்னிலையில் வரும்போது கட்டாயமாக மறைக்கவேண்டிய உடலின் பகுதிகளை வரையறை இட்டுக் கூறுகிறது இஸ்லாம். ஆண்களைப் பொறுத்தவரை மறைக்க வேண்டிய பகுதி முழங்காலுக்கும் தொப்பிளுக்கும் இடைப்பட்ட அனைத்தும் ஆகும். பெண்களுக்கு அது முகமும் முன்கையும் தவிர உள்ள அனைத்தும் ஆடைகொண்டு மறைக்கப்பட வேண்டியதாகும்.
ஹிஜாப் பெண்ணடிமைத்தனமா?
பெண்ணுக்கு கண்ணியத்தை கொடுப்பதற்கு இறைவன் பரிந்துரைத்த இந்த உயர்ந்த ஆடை ஒழுக்கத்தைத்தான் சிந்திக்காதவர்கள் பெண்ணடிமைத்தனம் என்று விமர்சித்தார்கள். உண்மைதான் என்ன?
தாய்மை என்ற பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்று முடக்கிப் போடவில்லை இஸ்லாம். கல்வி, தொழில், சம்பாதித்தல் போன்ற அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு முறைப்படி வழங்கி அவற்றை பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் ஹிஜாப் என்பதை சிந்திப்போர் யாரும் அறியலாம். பெண்ணின் உடலழகும் கவர்ச்சியும் அவளுக்கு எதிரியாக மாறாமல் இருக்க ஹிஜாப்தான் பாதுகாப்புக் கவசம்.