Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை! - Thiru Quran Malar

அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!

Share this Article

இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்..  வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர்!

  இப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும்  மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும் உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.

இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-……நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.

ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

 உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). 

மாறாக, சற்று நிதானித்து ‘இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது’ என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 

ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” இச்செய்தியை  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்  (முஸ்லிம் 5665 ): 

இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும்  செலவிடுவான்.

பணவேட்டையின் சாதனைகள் 

இன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது! தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். 

நிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான். 

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். 

 அந்நாளில் உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். இன்றைய அவசர உலகில் செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான்.

எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.

வாழ்வின் போக்கை மாற்றுவோம்! 

இவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன்.

திருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம். 

Share this Article

Add a Comment

Your email address will not be published.