அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்
செப்பனிடப்படாத கரடுமுரடான ஒரு பாதையில் தூசு கிளப்பிக்கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னால் ஒரே தூசு மண்டலம். அதில் ஒரு துகளை மற்றும் உற்று நோக்குங்கள்.
அது போன்ற ஒரு துகள் போன்றதுதான் பரந்துவிரிந்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில் இன்று நாம் வாழும் பூமியும்! ஆக, அந்த சிறு துகள் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கும் நுண்ணிய துகள் போன்றவர்களே நாம்! இப்போது எல்லையற்ற இப்பிரபஞ்சத்தை படைத்து திட்டமிட்டு இயக்கிக்கொண்டிருக்கும் அந்த இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
அப்படிப்பட்ட இறைவனை இந்த பூமியின் மீது காணப்படும் ஏதாவது மனிதர்களுக்கோ மிருகங்களுக்கோ அல்லது இன்னபிற அற்பமான படைப்பினங்களுக்கோ ஒப்பீடு செய்து அவற்றை கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அறிவார்ந்த செயலா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அவ்வாறு செய்வது அந்த இறைவன் நமக்கு அயராது வழங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றிகேடு ஆகாதா? எல்லையற்ற பிரபஞ்சத்தின் அதிபதியான இறைவன் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்களாகிய நம்மிடம் தனது திருமறை மூலம் பேசுகிறான். இந்த வசனங்களைப் படிக்கும்போது நமது அற்ப நிலையையும் அற்ப அறிவையும் அற்ப ஆயுளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
21:19. வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
21:20. இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இங்கு வானங்கள் என்பது பூமியைத் தவிர உள்ள பிரம்மாண்டமான பரப்பைக் குறிக்கும் சொல்லாகும். அதன் எல்லை என்பது நம் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. அறிவியலின் சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம் அறிந்துகொண்ட எல்லை கூட பாலைவனத்தில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பானதே.
அவ்வாறு இருக்கும்போது இந்த அற்பத்திலும் அற்பமான மனிதன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனை மறுப்பதும் அவனுக்கு நன்றி கூறும் முகமாக அவனை வணங்க மறுப்பதும் அவனது படைப்பினங்களையே கடவுளாக பாவிப்பதும் அவனது அறியாமை மற்றும் அகங்காரத்தின் வெளிப்பாடு அல்லவா?
இந்த பூமியும் வானங்களும் நமது ஐம்புலன்களுக்கு எட்டுபவையும் எட்டாதவையுமான பற்பல படைப்பினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நம் புலன்களால் அறிகிறோம். சிலவற்றை புலன்களுக்கு எட்டும் தகவல்களைக்கொண்டு பகுத்தறிகிறோம்.
இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டவற்ற எதுவாயினும் அவற்றை நம் அற்ப அறிவுக்கு எட்டாதவை என்று மட்டுமே கூறலாமே தவிர அவற்றை இல்லையென்று அப்பட்டமாக மறுப்பது மனிதனின் அறிவீனமே!மேற்படி வசனங்களில் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஆனால் நம்மைவிட பிரம்மாண்டமான படைப்பினங்களான வானவர்களைப் பற்றி குறிப்பிடுகிறான்.
வானங்களிலெங்கும் பரவி நிற்கும் அவர்கள் இந்த அற்ப மனிதர்களைப் போல் பெருமை பாராட்டுவதில்லை என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறான்.தொடர்ந்து இறைவன் இந்த அற்பமான பூமியின் மீது வாழும் அற்பமான மனிதர்கள் அறியாமையில் எடுத்துக் கொண்டுள்ள போலி தெய்வங்களின் உண்மை நிலையை உணர்த்தும் வண்ணம் கேள்வி எழுப்புகிறான்.
21:21. பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் இருந்து தேடினால் கண்ணுக்கே தட்டுப்படாத இந்த அற்பத்திலும் அற்பமான பூமியின் மீது காணும் ஏதேனும் ஒரு ஜீவியையோ பொருளையோ எடுத்துக்கொண்டு அதை அகிலங்களையும் அண்ட சராசரங்களையும் பரிபாலித்து வரும் இறைவனென்று கற்பிப்பதா? அவற்றிற்கு என்ன ஆற்றல் உள்ளது என்பதைப் பரிசோதித்து இருக்கிறீர்களா?
21:22. (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.(#அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுனர்கள் இருந்தாலோ ஒரு பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியர்கள் இருந்தாலோ அங்கு நடப்பது விபத்தும் குழப்பமுமே என்பது தெளிவு. அதேபோல இந்த பிரபஞ்சத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதும் தெளிவே! அந்த ஏக இறைவனோ தனித்தவன், தன்னிகரற்றவன், தனக்கு உவமையேதும் இல்லாத வல்லவன். ஆட்சியதிகாரம் முழுக்க முழுக்க அவனுடையதே.
21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
சரி, அவ்வாறு இவர்கள் எடுத்துக் கொண்டுள்ளவை தெய்வங்கள்தான் என்பதற்கு வேத ஆதாரங்கள் ஏதும் இவர்களிடம் உள்ளனவா என்றும் இறைவன் வினா தொடுகிறான்:
21:24. அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு முன் இந்த பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவனை மட்டுமே வணங்கக் கற்பித்தார்கள்.
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
தொடர்ந்து ஏகனான தனித்தவனான அந்த இறைவனுக்கு அற்பத்திலும் அற்பமான மனிதர்களில் இருந்து மக்களையும் சந்ததிகளையும் கற்பனை செய்யும் விபரீதத்தையும் இடித்துரைக்கிறான் அவன்:
21:26. அவர்கள் “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
21:27. அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.(அர்ரஹ்மான் என்றால் ‘கருணைவாய்ந்த இறைவன்’ என்று பொருள்)
ஒப்புவமை இல்லாத எல்லாம்வல்ல இறைவனை தன்னைப் போலவே பலவீனமான ஒரு படைப்பினத்தைப் போல கற்பனை செய்ததன் விளைவே இது. உண்மையில் இறைவன் அவனது தன்மைகளை பின்வரும் வசனங்கள் மூலம் நமக்கு எடுத்துரைக்கிறான்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)