Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அமைதியை நோக்கி ஒரு பயணம்! - Thiru Quran Malar

அமைதியை நோக்கி ஒரு பயணம்!

Share this Article

சற்று நினைத்துப் பாருங்கள்…
ஓர் அமைதியான உலகு…..
= அங்கு மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப்படுகிறது…  ஒன்றே மனிதகுலம், ஒருவன் மட்டுமே அனைவருக்கும் இறைவன், அவன் நம்மைக் கண்காணிக்கிறான், அவனிடம் நாம் திரும்ப இருக்கிறோம், நமக்கு இறுதி விசாரணை உள்ளது, நமது நன்மைகளுக்குப் பரிசாக சொர்க்கமும் நமது தீமைகளுக்கு தண்டனையாக நரகமும் வாய்க்க உள்ளது, அவையே நமது நிரந்தர வாழ்விடம் என்ற உண்மைகளை  மக்கள் முழுமையாக உணர்ந்து அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள்…

அப்படிப்பட்ட ஓர் உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்….

= மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அவை வார்த்தெடுக்கின்றன.  பாவங்கள் விலகுகின்றன…. சமூகத்தில் அநீதியும், அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து போகின்றன…. மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன.

= இறைவனின் பொருத்தத்திற்காகவும் மறுமையில் காத்திருக்கும் சொர்க்கத்து இன்பங்களுக்காகவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யும் பண்பு மனிதனுள் உடலேடுக்கிறது!

= அங்கே தர்மங்களும்  நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் தழைக்கின்றன!

= மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப்படுவதால் இறைவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுகிறது.

–    தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கை, பொறுமை, தியாகமனப்பான்மை, பிற உயிர்களிடம் அன்பு,  பணிவு, சுயமரியாதை உணர்வு, வீரம்,   பாவங்களில் இருந்து விலகியிருத்தல், போன்ற நற்பண்புகள் தழைக்கின்றன.

–    குடும்ப வாழ்விலும் சமூகவாழ்விலும் பொறுப்புணர்வோடு இறைவனின் எவல் விலக்கல்கள் முறைப்படி பேணப்பட்டு அங்கு பாசமும் நேசமும் பரஸ்பர புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் தியாகங்களும் உடலெடுக்கின்றன.

= அங்கு ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை உண்மையாகப் பின்பற்றப்படுவதால்…..  

 –    அங்கு ஜாதிகளும்  தீண்டாமையும் இல்லை. ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் இல்லை! கலவரங்களும் இல்லை!

–    இனத்துக்கு ஒரு நீதி,  நாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வருகிறது..

–    மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் முழுமையாக மலர்கிறது

= செல்வம் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம், மனிதனிடம் அது தற்காலிகமாக பரீட்சைக்காக ஒப்படைக்கப்படும் ஒன்று என்ற உண்மையை மக்கள் உண்மையாக உணர்வதால்…..

–    செல்வத்தைத் திரட்டும் வெறி இல்லை அங்கே! அதற்காக நடக்கும் கொலைகளும் கொள்ளைகளும், இலஞ்சமும் ஊழலும் சுரண்டலும் பதுக்கலும் சூழ்ச்சிகளும் இல்லை!

–    நாட்டுவளங்களை நெறியோடும் சகோதர உணர்வோடும் பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே ஓங்குகிறது!

–    வறுமையில்லா சமூகம் உருவெடுக்கிறது. வறுமை வந்தாலும் பகிர்ந்துண்ணும் பண்பும் பிறர்நலனுக்காக தன்னலத்தை விட்டுக்கொடுக்கும் பண்பும் அங்கு மேலோங்குகின்றன.

= பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிவதால்….

–    கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழிகின்றன.

–    பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுகிறார்கள் மக்கள்.

–    கடவுளின் பெயரால் நடக்கும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வருவதால் நாட்டில் செல்வ வளம் செழித்தோங்குகிறது! ஆக்கபூர்வமான வழிகளில் அது செலவிடப்படுகிறது..

= பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளர்கிறது. இறையச்சத்துடன் இணைந்து கல்வியும் அறிவியலும் கற்பிக்கப்படுகிறது.

–    மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ இனி அவை பயன்படுத்தப்படமாட்டாது.

–    மாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும். இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும் கல்வியாக அது மாறுகிறது!

 = .அங்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாடு உண்மையாக நடைமுறைக்கு வருவதால்….

–    பகைமைகளும் மோசடிகளும் அகன்று போய் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்துக் குலுங்குகிறது!

–    நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறைகின்றன.  

–    நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் காணாமல் போய்விடுகின்றன.

= இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்து காணப்படுகிறது! இது ஒரு வெற்றுக் கற்பனையல்ல, மாறாக இஸ்லாம் சமைக்க விரும்பும் உண்மை உலகு!

மனித மனங்களை பண்படுத்தி அவர்களைக் கொண்டே  நிலைநாட்ட விரும்பும் தர்ம இராஜ்ஜியத்தின் ஒரு சிறு வரைபடம்!
இது அனைத்து மனிதகுலத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் கைகளைக் கொண்டே உருவாக்க உள்ள இலட்சிய சமூகத்தின் ஒரு மாதிரி.

இதற்காக இடைவிடாமல் உழைத்தும் இதை ஒருவேளை நம்மால் அடைய முடியாமல் போகலாம். அதை அடையும் முன்பே நமக்கு மரணம் வரவும் வாய்ப்புண்டு. ஆயினும் அதற்காக உழைப்போருக்கு எந்த வகையிலும் இழப்பில்லை என்பதுதான் இதன் சிறப்பு!

மேலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் – அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?  (திருக்குர்ஆன் 4:122)

Share this Article

Add a Comment

Your email address will not be published.