Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அமைதிமிக்க உலகு சாத்தியமா? - Thiru Quran Malar

அமைதிமிக்க உலகு சாத்தியமா?

Share this Article

படைத்த இறைவனை மட்டும் வணக்கத்துக்குரியவனாக ஏற்று அவன் கற்பிக்கும்  ஏவல் விலக்கல்களைப் பின்பற்றி வாழ்வதற்குப் பெயரே இஸ்லாம். இதன் மூலம் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் பின்பற்றப்படுவதால் அதன் மூலம் இவ்வுலகிலும் அமைதி சாத்தியமாகிறது.

இவ்வொழுக்கத்தைப் பேணியவர்களுக்கு மறுமையில் நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கமும் பரிசாக வழங்கப்படுகிறது. அவ்வாறு தனிமனிதர்களைத் திருத்தி எடுத்து அவர்களைக் கொண்டே அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தையும் அநீதியை ஒழித்து நீதியையும் அதர்மத்தை ஒழித்து தர்மத்தையும் இவ்வுலகில் நிலைநாட்டுவதே இந்த இறைமார்க்கத்தின் குறிக்கோள் என்பதை அறிவீர்கள்.

இந்தப் புரட்சிக்கு மூலாதாரமாக விளங்குவது இஸ்லாத்தின் ஏக இறைக் கொள்கையே!‘கலிமா தய்யிபா’ என்றால் இஸ்லாத்தின் மூலமந்திரமான ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதைக் குறிக்கும். அந்த நல்வாக்கியத்தின் பொருள் ‘வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர யாருமே இல்லை’ என்பது.

இதன் சிறப்பைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:       (கலிமா தய்யிபா எனும்) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை (நபியே!)  நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.       அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான் (திருக்குர்ஆன் 14:24.-25)

அதாவது உண்மையான இறைக்கோட்பாடும், முறையான மறுமை நம்பிக்கையும் மக்கள் உள்ளத்தில் விதைக்கப் படுமானால் அது அள்ளி வரும் நன்மைகள் ஏராளம் ஏராளம்!  இந்தச் சொல் உறுதியாக இவ்வுலக மக்களால் பின்பற்றப் பட்டால்- அதாவது இந்த உறுதிமொழியை  மக்கள் மொழிந்து அதன்படி நடப்பார்களேயானால் – இன்று நாம் வாழும் உலகில் என்ன நடக்கும் என்பதைத்தான் முன்சென்ற கட்டுரையில் கண்டீர்கள்.

அமைதியை நோக்கி ஒரு பயணம்

சரி, இவையெல்லாம் சாத்தியமா? என்ற எண்ணம் உங்களில் பலருக்கும் வரலாம். ஆம், நாம் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் இது சாத்தியமே. இம்முயற்சியால் நாம் இழக்கப் போவது ஒன்றுமில்லை! அப்படிப்பட்ட புத்துலகைக் காணும் முன்பே நம் உயிர்கள் கைப்பற்றப் பட்டால் நமக்கு அதைவிடப் பலகோடி மடங்கு உன்னதமான சொர்க்கத்தை அல்லவா நம் இறைவன் நமக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்!

அவ்வாறு அமைதியை நோக்கிச் செல்லும் இப்பயணத்தில் எவ்வளவு தூரம் சென்றாலும் அது பயணிக்கு வெற்றியே! இதில் வைக்கப்படும் ஒவ்வொரு காலடிக்கும் நன்மையுண்டு! காலில் படியும் தூசுக்கும் கூட நன்மையுண்டு!  தனிநபராக பயணித்தாலும் குழுவாகப் பயணித்தாலும் குடும்பத்தோடு பயணித்தாலும் சமூகத்தோடு பயணித்தாலும் உலகமே ஒன்றாகப் பயணித்தாலும் அது உழைப்பிற்கேற்ற பலனை கொடாமல் இருப்பதில்லை.

உதாரணமாக இவ்வுலகிலேயே தனி நபர் நல்லொழுக்கம், குடும்ப அமைப்பு, ஒழுக்கம், உறவுகள் பேணப்படுதல், மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பேணப்படுதல் போன்றவற்றை இக்கொள்கையை ஏற்று பின்பற்றுவோரிடம் காணப்படுவதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல மற்ற சமூகங்களைப் பாதித்திருக்கும் சிசுக்கொலை, வரதட்சணை, முதியோர் இல்லங்கள், பாலியல் கொடுமைகள், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளில் இருந்து இவர்கள் பாதுகாக்கப் படுவதையும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  

இன்னும் இவைபோன்ற பல நன்மைகளை நாம் இவ்வுலகில் அவற்றைக் முழுமையாகக் காண வாய்ப்பில்லா விட்டாலும் மறுமையில் அவற்றிற்கான கூலியை அடைய உள்ளோம் என்பது  இறைவனின் வாக்குறுதி!

= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். (திருக்குர்ஆன் 18:30)

= (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (திருக்குர்ஆன் 11:115)

Share this Article

Add a Comment

Your email address will not be published.