அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள்
மண்ணில் உள்ளோரை நீங்கள் நேசித்தால் விண்ணில் உள்ளவன் உங்களை நேசிப்பான் என்பது பிரபலாமான நபிமொழி. அவ்வாறு அன்புகாட்டுதல் ஒவ்வொரு இறைவிசுவாசிக்கும் கடமை ஆக்கப்பட்டுள்ளது.
= அன்பு காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை:
திருக்குர்ஆன் 4:36.
மேலும், இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக இறைவன் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை
வறுமையின்போதும் அன்பு திருக்குர்ஆன்
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்
திருக்குர்ஆன் 17:28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
இல்லாளிடம் அன்பு
‘இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.(புஹாரி)
உயிர்களை நேசி
நபித்தோழர் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
“ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். இறைவன் அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு” என்று பதிலளித்தார்கள் (புஹாரி 2466. )
அன்புக்கட்டளைகள்
நபித்தோழர் பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவை(பிரேத ஊர்வலத்தை)ப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக்கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)