அனைவருக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம்
அனைத்துப் படைப்பினங்களுக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம்
அனைத்து மனிதர்களுக்கும் ஜீவராசிகளுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மிருகங்களின் உரிமை என்று தனித்தனியாகப் போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை.
ஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள் அப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும்.
அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். மட்டுமல்ல, இங்கு நம்மோடு வாழும் எண்ணற்ற ஜீவராசிகளுக்கும் அவற்றுக்கே உரிய உரிமைகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. அவற்றை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமும் கிடையாது என்பதே உண்மை!
இவை அனைத்தின் உரிமைகளும் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.
அந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.
திருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன்..
தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் உள்ளோம் என்பதை உணர்த்தி நம் செயல்களுக்காக இறைவனால் மறுமை வாழ்வில் விசாரிக்கப்பட உள்ளோம் என்றும் எச்சரிக்கின்றது இந்த இறைவசனம். அதாவது இறைகட்டளைகளைப் பேணி வாழ்வோருக்கு சொர்க்கமும் பேணாதவர்களுக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்ற உண்மையையும் உள்ளடக்கி நிற்கிறது இவ்வசனம்.
ஷரீஅத் என்னும் இறைச் சட்டம்
ஆக அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது.
அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.
இறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத்.
ஷரீஅத்தின் நோக்கம் என்ன?
- மனித வாழ்வில் நன்மைகளை – அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாக, நலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள், சிறப்புகள், வளங்கள், நலங்கள் எல்லாவற்றையும் – நிலை நிறுத்துவது
- மனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது மனித குலத்துக்கு தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாக, தீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள், அவலங்கள், அழுக்குகள், கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.
ஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன. வணக்கங்கள், தனிநபர் நடத்தை, ஒழுக்கம், பழக்க வழக்கம், நடையுடை பாவனை,குடும்ப வாழ்வு, உண்ணுதல், பருகுதல், சமூகத் தொடர்புகள், பொருளாதார நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள், நீதித்துறை, அரசியல் என எல்லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.
ஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானது, எது தீமையானது என்பதையும், எது இலாபத்தை தரக் கூடியது, எது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும், எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது.
ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.
இன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும்.
அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.
ஷரீஅத் நடைமுறைக்கு வந்தால் என்னாகும்?உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்….
§ = சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
§ = செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
§ .= வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
§ = நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது. ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் “தரிசாக கிடக்க” அனுமதிக்காது. குத்தகை முறை தடை செய்யப்படும். அவ்வாறு இருக்குமாயின் அரசு அதனை உள்வாங்கி பிரித்துக் கொடுக்கும்.
§ = சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல் மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும்,தொழில் மற்றும் வணிக வாய்ப்பும், கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
§ = சமூகத்தில் ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், விதவைகள், நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் – (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.
§ = பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை – தீமை நியாயம் – அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.
§ = கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.
§ = தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
§ = குடும்ப உறவுகளையும் அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம் போன்றவை தடை செய்யப்படும்.
§ = கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.
§ = பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.
§ = சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது.
ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும் செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.
இன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதி, நியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன.
சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை!