Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அநீதிகள் அடங்குவது எப்போது? - Thiru Quran Malar

அநீதிகள் அடங்குவது எப்போது?

Share this Article

அன்றாட நாட்டு நடப்புகளைக் கண்டு மனம் வெதும்பாதவர் யாரையும் இன்று காண்பது அரிது! அநியாயம் செய்தவர்களும் அக்கிரமங்கள் செய்பவர்களும் சுதந்திரமாகத் திரிவதும் நாட்டில் உயர் பதவிகளில் இருந்து ஆதிக்கம் செய்வதும் அதிகரித்து வருகின்றன. அவர்கள் தங்கள் தொண்டர்களால் மரியாதை செய்யப்படுவது மட்டுமல்ல, இஷ்ட தெய்வங்களாக பூஜை செய்யவும் படுகின்றனர்.  

கொலை கொள்ளை விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு அப்பட்டமாக கையும் களவுமாக பிடிபடுபவர்கள் அடுத்த நாளே  சிரித்த முகத்தோடு உலா வருவதும் பொதுமக்களை முட்டாள்களாக ஆக்குவதும் தொடர்கின்றன. இவை போன்ற பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் காணும் பலரும் ‘இறைவனே இல்லை’  என்றும் இறைவன் இருந்திருந்தால் இந்த  அநியாயங்கள் நடக்குமா?’ என்றெல்லாம்  புலம்புவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.

இதன் காரணமாக சில ஆத்திகர்களும்  நாத்திகத்துக்குத் தாவி விடுகின்றனர். இவர்கள் தங்கள் கண்முன் நடப்பவற்றை மட்டும் காண்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தால் உண்மைகளை சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த புலம்பல்கள் அறியாமையின் வெளிப்பாடுகளே  என்பதை சிந்திப்போர் அறியலாம்.

இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் மனிதன் என்ற சிறு ஜீவி தன்னை அனைத்தும் அறிந்தவனாக பாவித்துக் கொள்வதால்தான் இந்த குறுகிய மனப்பான்மை உண்டாகிறது. தனக்குத் தெரியாதவற்றையும் தன் புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாதவற்றையும் ஒரேயடியாக இல்லை என்று முடிவு செய்வதும் அதுதான் இன்று பகுத்தறிவுவாதம் என்று சிலரால் தம்பட்டம் அடிக்கப் படுகிறது.

மாறாக தன புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாதவற்றைப் பற்றி யாராவது கூறும்போது அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிவதே உண்மையில் பகுத்தறிவு என்பது.அந்த அடிப்படையில் இவ்வுலக அமைப்பையும் இங்கு காலாகாலமாக நடைபெறுபவற்றையும் ஆராயும்போது இவ்வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்பதையும் இவ்வுலகம் என்பது ஒரு பரீட்சைக்கூடம் என்பதையும் நாம் அறிய முடியும்.

இறைவேதங்களும் இறைத்தூதர்களும் கூறுவது போல இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின்னர்தான் அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்பிக்கப் பட்டு முழுமையான நியாயத்தீர்ப்பு உண்டாகும் என்பது உண்மை என்பதையும் உணர முடியும்.

உடனுக்குடன் தண்டித்தால் என்ன ஆகும்?

ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான்.

அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை? இறைவனே தன் திருமறையில் கூறுகிறான்.

 மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ்  தண்டிப்பதாக இருந்தால்  பூமியில் எந்த  உயிரினத்தையும் அவன்  விட்டு  வைக்க மாட்டான்.  மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை  அவர்களைப்  பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின்  கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்.  முந்தவும் மாட்டார்கள்.  (திருக்குர்ஆன் 16:61)

உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள். . (திருக்குர்ஆன் 18:58.)

என்று தணியும் நீதியின் வேட்கை

இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப்  பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன்  முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தொல்வியுறுவோருக்கு  நரகமும் விதிக்கப்படும்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)

ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே.

தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.

நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)

அதாவது ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை அன்று இறைவன் வழங்குவான்.
 இவ்வுலகைப் பொறுத்தவரையில் இதுதான் இறைவனின் ஏற்பாடு. இதைத் தட்டிக்கேட்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் மிகமிக அற்பமானவர்கள்.

நம் சிற்றறிவைக் கொண்டு இப்பரந்த பிரபஞ்சத்தின் படைப்பாளனின் திட்டங்களை ஆராயவும் எடைபோடவும் முடியாது என்பதை ஒப்புக்கொண்டு அவன் தனது தூதர்கள் மூலமாக எதை அறிவித்துத் தருகிறானோ அவற்றை அப்படியே ஏற்பதுதான் அறிவுடைமை! 

Share this Article

Add a Comment

Your email address will not be published.