அடக்குமுறையாளர்களின் கொட்டம் அடக்கப்படும்!
இறைவிசுவாசிகளின் மனஉறுதி
எதுவந்த போதும் இறைவிசுவாசிகள் கவலைப் படுவது இல்லை. இந்த உலகம் தற்காலிகமான பரீட்சைக் கூடம் என்பதையும் இங்கு நடப்பவை அனைத்தும் இந்தப் பரீட்சையின் பாகங்களே என்பதையும் அவர்கள் உறுதியாகப் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.
இங்கு அனுபவிக்கும் சிறு துன்பத்திற்கும் இறுதித்தீர்ப்பு நாளன்று முழுமையாக நற்கூலி கிடைக்கும் என்பதையும் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் அமர வாழ்வு வாழும் பாக்கியத்தை இறைவன் வழங்க உள்ளான் என்பதையும் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் மனஉறுதி பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்:–
“_எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்_.” (திருக்குர்ஆன் 3:9)
அக்கிரமக்காரர்களின் நாளைய நிலை:
தொடர்ந்து இவ்வுலகில் விசுவாசிகளைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் கயவர்களின் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பதை கூறுவதைக் காணுங்கள்:-“_நிச்சயமாக, இறைமறுப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் இறைவனிடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்_.” (திருக்குர்ஆன் 3:10)
என்னதான் இவ்வுலகில் அவர்கள் அநீதியும் அக்கிரமும் கையாண்டு இறைவிசுவாசிகளை அடக்கியாண்டாலும் சித்திரவதைகள் செய்தாலும் அவர்களின் உடைமைகளை சூறையாடினாலும் தீக்கிரையாக்கினாலும் அவர்களும் ஆறடி மனிதர்களே.
மரணம் என்ற ஒன்று ஒருநாள் அவர்களையும் ஆட்கொள்ளும். இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களும் விசாரணைக்காக உயிர்பிக்கப் படுவார்கள். அன்று இவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப் பட உள்ளது.
#மறுக்க_முடியுமா_மறுமை_வாழ்வை?
இவ்வுலகில் வாழ்ந்தபோது இருந்த செல்வமும் ஆதிக்கமும் அடியாட்களும் ஆதரவாளர் படையும் எதுவுமே அன்று இவர்களுக்கு பயனளிக்காது. இன்று ஆதிக்க வெறியில் பெருமையோடு மார்தட்டிக்கொண்டு நடந்தவர்கள் அன்று சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். அங்கு கற்களோடு இவர்களும் சேர்த்து எரிபொருளாய் எரிக்கப்படுவார்கள்.
நரகம் என்பது கற்பனையோ மாயையோ கதையோ அல்ல. இன்று வாழும் வாழ்க்கை எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் மறுமையும் சொர்க்கமும் நரகமும்.இவ்வாறு ஆதிக்க வெறியில் ஆட்டம் போடுபவர்கள் முற்காலத்திலும் இருந்துள்ளார்கள். அவர்களின் இன்றைய நிலை குறித்து சிந்தித்தாலே விளங்குமே இவர்களுக்கு! பெருமையடித்துக் கொண்டு நடந்த அவர்கள் மண்ணுக்கடியில் மக்கிப்போன எலும்புகளாக சிதறிக் கிடக்கிறார்கள் இன்று!
“(_இவர்களின் நிலை செயல் யாவும்) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் நிலை போன்று இருக்கின்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், இறைவன் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். இன்னும் இறைவன் தண்டிப்பதில் மிகக்கடுமையானவன்_. (திருக்குர்ஆன் 3:11)
அக்கிரமக்காரார்கள் அடக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை!
“_எவர்கள் இறை சத்தியத்தை மறுக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: “அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்_.” (திருக்குர்ஆன் 3:12)
#இறைவன்_ஏன்_அநியாயங்களை_அனுமதிக்கிறான் ?
_உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள்_. (திருக்குர்ஆன் 18:58.)
ஆனால் இறைமறுப்பைக் கைவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி அவன் பால் திரும்பினால் அவன் அவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் உள்ளான்.