முதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா?
முதுமைக்குப் பின் மீண்டும் இளமையா?
இம்மை உலகோடு #மறுமை வாழ்வை இணைத்துக் காண்போரைப் பொறுத்தவரை அது சாத்தியமே என்பதை அறிவார்கள். முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு நிரந்தர வாழ்வின் தொடக்கமே அது என்பதை அவர்கள் அறிவார்கள்.
அதுதான் உண்மையான #பகுத்தறிவு! நாளை #மறுமையில் நல்லோருக்குக்காக தயார்செய்யப்பட்டுள்ள சொர்க்கத்தில் அவர்கள் நுழையும்போது என்றும் மாறா இளமையோடு அவர்கள் நுழைவார்கள்! ஏனெனில்….. மரணம் என்பதே இனி இல்லையல்லவா?
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதற்கே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் #இறைவனையும் #மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் #மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
36:77-79. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!