Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்! - Thiru Quran Malar

மாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்!

Share this Article

மக்காவில் நபிகள் நாயகம் அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கும் எதிரிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இடையேயும் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த வேளை இஸ்லாத்திற்கு கடுமையான எதிரிகளில் ஒருவராக இருந்தவர் உமர்.  நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவராக இருந்தார்.

 பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக முஸ்லிம்கள் அவர் மூலம் அனுபவித்து வந்தனர்.ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட எண்ணி வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் என்பவரை உமர்  வழியில்  சந்தித்தார்.

 “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்றார் நுஅய்ம்  “நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார் நுஅய்ம் “ஓஹோ, நீயும்  உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே தெரிகிறதே”நுஅய்ம் கலவரப்படாமல் கூறினார்,  “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது தங்கையும் உனது மைத்துனனும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர். தெரியுமா உனக்கு?”இதைக் கேட்டதுதான் தான் தாமதம்… உமரின் பாதை மாறியது..

“அப்படியா? முதலில் இவர்களின் கதையை முடிக்கிறேன்.. அப்புறம் முகம்மதை கவனிக்கிறேன்..”தங்கையின் இருப்பிடம் நோக்கி விரைந்தார் உமர்…அங்கு ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்த கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள “தாஹா’ எனத் தொடங்கும் திருக்குர்ஆனின் 20 ஆவது அத்தியாயத்தின்  வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

உமரின் வருகை உணர்ந்த  கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் தங்கையும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார்.வீட்டினுள் நுழைந்தார் உமர். “உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டார். 

“நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை” “சரி, நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார் உமர். “உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?”  மைத்துனர் மெதுவாகக் கேட்டார்.மைத்துனரின் இந்தக் கேள்வி உமரை  கடுஞ்சினம் கொள்ளவைத்தது.

மைத்துனர் மீது ஒரே பாய்ச்சலாகப்  பாய்ந்து அவரை பலமாகத் தாக்கினார். கீழே விழுந்தவரை ஏறி  மிதிக்கவும் செய்தார். தனது கணவரைக் காக்க  உமரின் தங்கை குறுக்கிட்டார். கணவனை விட்டும் உமரை விலக்கினார். அவரையும் விடவில்லை உமர்..சினங்கொண்ட வேங்கை தங்கையையும் தாக்கியது.  தங்கையின் கன்னத்தில் கடுமையாக அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார் உமர்.

இப்போது கோபம் பொங்கியேழுந்தது தங்கைக்கு..“அண்ணா, உனது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமாஅதை ஏற்றுக் கொள்ளக்கூடாது? நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.. இதோ நான் கூறுவதைக் கேட்டுக்கொள்… அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று கண்டிப்பான குரலில் முழங்கினார் தங்கை.தங்கையின்  உறுதி உமரை நிலைகுலைய வைத்தது. ஆடிப்போனார் உமர்..

ஒரு புறம் நிராசை.. மறுபுறம் தங்கைக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. கோபமுள்ள இடத்தில்தான் குணம் இருக்கும். குணம் மெல்லமெல்ல தலை தூக்க ஆரம்பித்தது..“உங்களிடமுள்ள அந்த ஏட்டை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும்” “முடியாது, அதற்கான சுத்தம் இல்லை உன்னிடம்.. போய் குளித்துவிட்டு வா”பணிந்தது வேங்கை.  குளித்து விட்டு வந்தார் உமர்.

 வந்தவுடன் திருமறைக் குர்ஆன் பதியப்பட்ட அந்த ஏட்டை கையில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் பெயரால்) என்று வாசிக்கத் துவங்கினார் உமர்.  “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’ என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்!

உடனே எனக்கு முஹம்மதைக் காண வேண்டும்.!” என்றார் உமர்.அடிவிழுந்த இடங்களில் ஆனந்தம் பொங்கியது தங்கைக்கும் கணவருக்கும். கண்கள் எல்லாம் குளங்களாயின..  உலக வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.

உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி). அதுவரை பதுங்கி இருந்தவர்  வெளியே வந்தார். “உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “இறைவா! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாத்திற்கு  உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்” என்றார் கப்பாப்.

.  உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். அப்போது ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் அவரது சிறிய தந்தை ஹம்ஜா மற்றும் தோழர்களோடு இருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். உமர் வந்த வேளையின்போது இறைச்செய்தி (வஹி) இறங்கிக்கொண்டிருக்கும் நேரமாக இருந்தது. வீட்டின் உட்பகுதியில் இருந்தார்கள் நபிகளார்.  உமர் கதவைத் தட்டியபோது தோழர் ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் கண்டார்.   செய்தி பரவியது.

அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். அனைவர் உள்ளங்களிலும்  திகில். என்ன நடக்கப்போகிறது எனபதை யாரும் அறிந்திருக்கவில்லை. அங்கிருந்த  நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஜாவும் உமரைப் போலவே ஒரு மாவீரர். மூன்று நாட்களுக்கு முன்தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.  ஹம்ஜா கூறினார்,. “ஓ! உமரா வந்திருக்கிறார்?

 அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!”.உமரைக் கண்ட நபிகளார் அவரை நெருங்கி வந்தார்கள்.

அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் இறைவன்  உன்மீதும்  இறக்க வேண்டுமா?” என்றார் நபிகளார். பிறகு கூறினார்கள், “இறைவா! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். இறைவா! உமரால் இஸ்லாத்திற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள்.

புளகாங்கிதம் உமரைப் பொதிந்தது. ‘இந்த மாமனிதரையா நான் எதிர்த்து வந்தேன். இறைவா என்னை மன்னித்துவிடு’ மனம் இறைவனிடம் மண்டியிட்டது.“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, நீங்கள்தான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்” சற்றும் தாமதியாமல் அந்த உறுதி மொழியை அங்கே முழங்கினார் உமர்..

உலகுள்ளவரை மொழியப்படும் அந்த உறுதியான உறுதிமொழியை மொழிந்து உமர் என்ற மாவீரர் இஸ்லாத்தைத் தழுவினார். நபிகளாரும் தோழர்களும் உமரை ஆரத் தழுவினார்கள். வல்லோன் இறைவனை புகழ்ந்தன நாவுகள். ஆத்மார்த்தமான அந்த தழுவல்கள் மனித சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உலகெங்கும் வளர்க்க அடித்தளமாக அமைந்ததை நாம் அறிகிறோம்… ஆனால் அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

Share this Article

Add a Comment

Your email address will not be published.