Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை! - Thiru Quran Malar

மறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை!

Share this Article

ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து  உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும்  நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப்  போகிறோம் என்பது நம்மை எதிர்நோக்கியிருக்கும் அப்பட்டமான உண்மை! நாம்  விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் மரணம் என்பதையும்  அதற்கு பின்னர் உள்ள வாஸ்த்தவங்களையும்  ஒவ்வொருவரும் சந்தித்தே ஆகவேண்டும்  என்பது நமது பகுத்தறிவு நமக்கு கூறும் பாடம். கீழ்க்கண்டவையே அந்த வாஸ்த்தவங்கள்  என்பது தனது தூதர்கள் மற்றும் வேதங்கள் மூலமாக  இறைவன் கற்றுத் தரும் பாடம்..         

மரணத்திற்க்குப் பிறகு மண்ணறை வாழ்வு உண்டு.. தொடர்ந்து இறைவன் நிச்சயித்த கெடு  வந்துவிட்டால் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும்.. பிறகு நாம் அனைவரும் இறுதித் தீர்ப்புக்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு  விசாரிக்கப்படுவோம். படைத்தவனுக்கு கட்டுப்பட்டு  வாழ்ந்த புண்ணியவான்களுக்கு நிரந்தர இன்பங்கள்  நிறைந்த சொர்க்கம் கிடைக்கும். படைத்தவனையும்  அவன் கட்டளைகளையும் அலட்சியம் செய்து வாழ்ந்த பாவிகளுக்கு நிரந்தர வேதனைகள் நிறைந்த நரகம் கிடைக்கும். சந்தேகத்துக்கு  இடம்கொடாத விதத்தில்  பாமரனும் பகுத்தறியும் விதத்தில் இவ்வுண்மைகளை இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆன் பல  இடங்களிலும்  அதன் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறது.  அதேவேளையில் கருணையுள்ள நம் இறைவன் நாம்  எவ்வளவுதான் பாவங்களில் மூழ்கித்  திளைத்தவர்களாக இருந்தாலும் உண்மையான மனதோடு அவன்பால் திரும்பி முறையிட்டால்  அனைத்தையும் மன்னிக்கக்  கூடியவனாக இருக்கிறான். 

39:53    .”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் இறைவனுடைய அருளில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54.    ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

ஆனால் திடீரென நம் கதை முடிக்கப் படலாம்.  மரணம்  மூலமாகவோ அல்லது இறைதண்டனைகள்  மூலமாகவோ  உலக அழிவின் போது ஏற்படும் பயங்கரங்கள்  மூலமாகவோ அவ்வேதனை என்பது வரலாம்.

39:55    .நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

இவ்வுலக வாழ்க்கையின் நமக்கு நிச்சயிக்கப்  பட்ட கெடு  முடிந்தப்பின் புலம்பி எந்த பயனும்  கிடையாது. மீண்டும் இவ்வாழ்க்கை என்ற  பரீட்சைக் கூடத்திற்கு திரும்பி  வருவது என்பது  யாருக்கும் இயலாது. இது  இறைவனின்  தீர்மானமான முடிவு.  அவ்வாறு திடீரென  பிடிக்கப்படும்போது பலரும் பல்வேறு விதமாகப்  புலம்புவார்கள். அதையும் இன்றே  நமக்குப்  படம்பிடித்துக்  காட்டுகிறான் வல்ல இறைவன்.

39:56   .”இறைவனுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

39:57   .அல்லது; ”இறைவன் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் – பயபக்தியுடையவர்களின் ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

39:58   .அல்லது; வேதனையைக் கண்ட சமயத்தில், ”(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (இன்றே நாம் எச்சரிக்கிறோம்). 

அவ்வாறு புலம்புவோரைப் பார்த்து பரிதாபப்படுபவரோ அல்லது அவர்களுக்காக பரிந்து பேசுவோரோ யாரும் அன்று இருக்க மாட்டார்கள். மீணடும் இறுதித் தீர்ப்புநாள் அன்றும் புலம்பல்கள் தொடரும்…….

18:48.  அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ”நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).

18:49.  இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ”எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். மீணடும் தீர்ப்புகள் வழங்கப்பட்டு குற்றவாளிகள் நரகத்திற்கு முன் நிறுத்தப்படும்போதும் புலம்பல்கள் உச்சக்கட்டத்தை அடையும். 

67:6     இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.

67:7     அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.

67:8     அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், ”அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

67:9     அதற்கவர்கள் கூறுவார்கள்; ”ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, ‘இறைவன் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”

67:10.  இன்னும் அவர்கள் கூறுவார்கள்; ”நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”

67:11   (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.ஆம் அன்பர்களே நாம் பாடம் பெற்றுத் திருந்துவதற்காக வேண்டி நாளை நடக்கப் போகின்ற சம்பவங்களை இன்றே நமக்குமுன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான் நம் இறைவன்.

78:39   அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

78:40   நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் – மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை – வினைகளை – அந்நாளில் கண்டு கொள்வான் – மேலும் சத்தியத்தை மறுப்பவன் ”அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
ஆனால் யார் சத்தியத்தை மறுக்காது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்ந்தார்களோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

39:61   .எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை இறைவன் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.