Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள் - Thiru Quran Malar

மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்

Share this Article

நபிகள் நாயகமும் சரி, அவருக்குப்பின் வந்த கலீபாக்களும் சரி, சொந்தத் தேவைக்காக அரசுப் பணத்தில் கை வைப்பது இஸ்லாமியச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அதனால்தான் அரசுக்கருவூலம் நிரம்பி வழிந்தபோதும் சொந்த வாழ்வை வறுமையிலேயே கழித்தனர். நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் கலீபா அபூபக்கர்(ரலி). (கலீபா என்றால் ஜனாதிபதி அல்லது மக்களின் தலைவர் என்று பொருள்.) ஆட்சியாளராக பதவி ஏற்ற பின் ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

 ’மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு  செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். 

உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.’  –(ஹூகூகல் இன்சான், பக்கம் 160)

அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அரசு அலுவல்கள் காரணமாக அதுவரை செய்துகொண்டிருந்த வியாபாரத்தை தொடர முடியாததால் அவர் அரசுக் கருவூலத்தில் இருந்து ஒரு ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார். ஒரு சிறு தொகையை ஊதியமாகப் பெற அவரும் ஒப்புக்கொண்டார்.

எளிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒருநாள் தன் மனைவி உணவோடு ஒரு இனிப்புப் பதார்த்தத்தையும் பரிமாறினார். ஆச்சரியப்பட்ட அபூபக்கர் ‘இது எங்கிருந்து உனக்கு?’ என்று மனைவியை வினவினார். 

“நீங்கள் தினமும் செலவுக்குத் தரும் பணத்தில் இருந்து சிறுகச்சிறுக சேமித்து வைத்தேன். அதில் இருந்து செய்ததுதான் இந்த இனிப்பு” “சேமிக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெற்று வந்துள்ளேனா? இது கூடாது!” என்றார் அபூபக்கர்.

தன் அடுத்தமாதம் முதல் ஊதியத்தின் அளவைக் குறைக்க ஆணையிட்டார் அபூபக்கர்! ஊதிய உயர்வு கோரி போராட்டங்கள் நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊதியக் குறைவு கோரிப் போராடியவர் பற்றி எங்காவது கேட்டிருக்கிறோமா?

அபூபக்கர் அவர்களுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் உமர்(ரலி) அவர்கள். இவரது ஆட்சியில் மதீனாவில் தோன்றிய சிற்றரசு சில ஆண்டுகளில் மாபெரிய பேரரசானது. அன்றைய வல்லரசுகள் உமரின் காலடியில் வீழ்ந்தன்.

பாரசீகம், இராக், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, எகிப்து, ஆர்மீனியா, இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிந்தது. அவ்வளவு பெரிய வல்லரசுகளை ஆட்டிப்படைத்த கலீபா உமரின் வாழ்வு எவ்வாறு இருந்தது?

இதோ . 18 ம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்:

 “தொலிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது.

பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”
( Gibbon – தனது  In The Decline and Fall of the Roman Empire என்ற நூலில்)


உமர் என்ற பெயரைக்கொண்ட இன்னொரு கலீபாவை பிற்காலத்தில் சரித்திரம் கண்டது. அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் என்பார். ஒரு சமயம் அவருக்குத் தனிப்பட்ட செலவுக்காக ஒரு திர்ஹம் தேவைப்பட்டது. தம் மனைவி பாத்திமாவிடம் வந்து, “கைச் செலவுக்குப் பணம் வேண்டும். ஒரு திர்ஹம் இருந்தால் தா” என்று கேட்டார் கலீஃபா.

மனைவிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. “இவ்வளவு பெரிய ஆட்சியாளராக இருந்தும் ஒரு திர்ஹம்கூட உங்களிடம் இல்லையே?” என்றார். 

கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அமைதியாகக் கூறினார்: “நரகத்தின் நெருப்பு விலங்குகளைவிட இந்த நிலைமை மேலானது.” பாத்திமா பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டார்.

இறையச்சத்துடனும் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடனும் ஒரு நாடு ஆளப்பட்டால் இந்த உலகமே சுவனமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Share this Article

Add a Comment

Your email address will not be published.