Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மனிதனை நினைக்க கடவுளை மறப்பதா? - Thiru Quran Malar

மனிதனை நினைக்க கடவுளை மறப்பதா?

Share this Article

‘நாத்திக நண்பர்கள் ஆத்திகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்று உண்டு… “கடவுளை மற, மனிதனை நினை!” என்பதுதான் அது.
அன்றாடம் உண்பதற்கு உணவில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வாடும்போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.

சிலைகளுக்கு பாலாபிஷேகமும் நெய்- அபிஷேகமும் நடக்கின்றன. திருமணத்திற்கு சிறு நகைக்குக் கூட வழியிலாத கோடிக் கணக்கில் ஏழைப் பெண்கள் தவிக்கும்போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன.

சுற்றுமுள்ள ஏழைகளை சற்றும் கவனிக்காமல் செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர். இப்படிப்பட்ட கடவுளால் என்ன பயன்? என்பது அவர்களின் வாதம்.தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுள்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் ‘மதங்கள் அர்த்தமற்றவை’ என்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தின் நிலைப்பாடு

உண்மையில் இஸ்லாம் என்பது ஒரு மதமும் அல்ல. பலர் கருதுவது போல சில சடங்குகளின் தொகுப்பும் அல்ல. மாறாக அது ஒரு முழுமையான வாழ்வியல் நெறி. மனிதவாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவி நிற்கிறது. மேற்கூறப்பட்டவாறு கடவுளின் பெயரால் பொருளாதாரத்தை வீணடிக்கும் காரியங்களை அறவே இஸ்லாம் மறுக்கிறது.

ஆனால் மனிதனுக்கு சேவை செய்ய கடவுளை மறக்கவேண்டும் என்ற வாதத்தை அறவே மறுக்கிறது.இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மனிதனை நினை அவனை ஒருபோதும் மறக்காதே என்று நினைவூட்டிக்கொண்டிருப்பதே கடவுள்தான்! ஆம், இஸ்லாம் கற்பிக்கும் அனைத்து வழிபாடுகளும் மனித நலனையே மையம் கொண்டுள்ளன.

ஐவேளைத் தொழுகைகள் ஒருபுறம் தனிமனித நல்லொழுக்கத்திற்கு வித்திடுகின்றன. மறுபுறம் இத்தொழுகைகளைக் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து பள்ளிவாசல்களில் தொழும்போது அங்கு மனித சமத்துவமும் சகோதரத்துவமும் பேணப்படுகின்றன. சக மனிதனின் பசியை செல்வந்தர்களுக்கு உணர்த்துகிறது  ரமலான் மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு என்ற வழிபாடு.

ஜகாத் என்ற கட்டாய தர்மம் ஏழைகளின் துயர்துடைக்கும் புரட்சியை நடத்துகின்றது.  சுயநலத்தால் மனிதன் சகமனிதனை மறந்து போகின்ற உலகில் சகமனித நலனுக்காக செய்யப்படும் அனைத்து சேவைகளையும் வழிபாடுகள் என்று கற்பிக்கிறது இஸ்லாம். மட்டுமல்ல மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக வழிபாட்டுத்தலங்களுக்கு காணிக்கை செலுத்தச் சொல்லவில்லை இஸ்லாம். மாறாக அப்படிப்பட்ட காணிக்கைகளையும் நேர்த்திக்கடன்களையும்  ஏழைகளுக்காக செலவிடக் கற்பிக்கிறது அது.

உதட்டளவு மனித நேயம் அல்ல!

நாத்திகர்களும் நாத்திக இயக்கங்களும் உதட்டளவில் ‘மனிதனை நினை’ வாசகத்தை மொழியும்போது இஸ்லாம் மனிதனை நினைத்தால் மட்டும் போதாது, அவனை தன் சகோதரனாக, சமமானவனாக பாவிக்க வேண்டும் என்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிடுகிறது.

அவனது உரிமைகளைப் பேணவேண்டும் என்றும் அவற்றை மீறுதல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கிறது. உலகெங்கும் மனித உரிமைகளை மீட்க உந்துசக்தியாக திகழ்கிறது இஸ்லாம்.திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான் :

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!  அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி  உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன். 

தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் உள்ளோம் என்பதை உணர்த்தி நம் செயல்களுக்காக இறைவனால் மறுமை வாழ்வில் விசாரிக்கப்பட உள்ளோம் என்றும் எச்சரிக்கின்றது இந்த இறைவசனம். அதாவது இறைகட்டளைகளைப் பேணி வாழ்வோருக்கு சொர்க்கமும் பேணாதவர்களுக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்ற உண்மையையும் உள்ளடக்கி நிற்கிறது இவ்வசனம்.

சமூக சீர்திருத்தங்கள்

எங்கெல்லாம் இஸ்லாம் என்ற இந்த வாழ்வியல் கொள்கை திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்
= மனித உரிமை மீட்பு, 
= இனவெறி ஒழிப்பு, 
= ஜாதி ஒழிப்பு,
= நிறவெறி ஒழிப்பு,= சுயமரியாதை மீட்பு, 
= மனித சமத்துவம் நிலைநாட்டல், 
= மனித சகோதரத்துவம் நிலைநாட்டல்,
= பெண்ணுரிமைகள் மீட்பு, 
= பெண்சிசுக்கொலை ஒழிப்பு, 
= வரதட்சணை ஒழிப்பு,
= பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு 
= விபச்சார ஒழிப்பு
= குடும்ப அமைப்பின் பாதுகாப்பு,
= குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் 
= தனிநபர் நல்லொழுக்கம்,
= மது, போதை தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு 
= வட்டி ஒழிப்பு 
= வறுமை ஒழிப்பு, 
= வழிபாட்டு உரிமை மீட்பு 
= இடைத்தரகர் ஒழிப்பு 
= மூடநம்பிக்கை ஒழிப்பு 
= ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு,
= ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு,

போன்ற பற்பல சமூகப் புரட்சிகளை உண்டாக்காமல் இருப்பதில்லை. மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் புரட்சிகள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை. 

நாத்திகர்களின் நிலைப்பாடு

நாத்திகர்கள் கூறுவதுபோல கடவுளை மறந்தால் மேற்கண்ட சமூகப் புரட்சிக்கள் உலகில் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவு. மேலும் கடவுளை மறப்பதோடு மனிதனையும் மறக்கடிக்கச்  செய்கிறது நாத்திகம் என்பதே உண்மை. அவர்களிடம் இனம், நிறம், மொழி, இடம் என இயல்பாகவே பிரிந்து கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்க வலுவான கொள்கை எதுவும் கிடையாது.

சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை வரையறுக்க அளவுகோல் (criterion) எதுவும் கிடையாது. கடவுளையும் மறுமை வாழ்வையும் மறுப்பதால் அவர்களுக்கு கொள்கை உறுதிப்பாடு உண்டாக வாய்ப்பே இல்லை. எந்த சமூகத் தீமைகளுக்கும் எதிராகப் போராட நிலையான ஒரு இயக்கத்தை உருவாக்கவோ நடைமுறை சாத்தியமான திட்டங்கள் வகுக்கவோ முடிவதில்லை.

உதாரணமாக பெண் சிசுக்கொலை, தீண்டாமை, தனிநபர் ஒழுக்க சீர்கேடு போன்றவற்றை ஒழிப்பதில் அல்லது சீர்திருத்துவதில் நாத்திகக் கொள்கைவாதிகளின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.