பொருளாசை என்ற போதை
பொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றவும் மறந்துவிடுகின்றனர்.
தன் உடலுக்கு, தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் பெற்றோருக்கு, தன் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளும் இப்படிப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. பண போதையில் கண்மூடித்தனமாக இவர்கள் சேர்த்த செல்வங்கள் இவர்களின் வாரிசுகளுக்குக் கைமாறப் போகிறது என்பதை சற்றும் உணராமலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது.
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் தன் மனைவி மக்கள் விஷயத்தில் பொறுப்பாளன் ஆவான்.
பெண் தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: #புகாரி 5200
வாரிசுகளின் வஞ்சனை
இறையச்சம் – அதாவது தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு – பெற்றோருக்கும் இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. இறை உணர்வை பெற்றோரும் போதிப்பது இல்லை, கல்விக்கூடங்களும் போதிப்பது இல்லை. அவர்களின் கவலையெல்லாம் குழந்தைகள் பெரிதாகி உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே! அவர்களிடம் மனிதத்துவம் நிலைக்க வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு சற்றும் கவலயே இல்லை!
ஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்குர்ஆன் 31:14)
இது நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இறைவனின் அறிவுரை. இதுபற்றி சிறுவயது முதலே குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.இவ்வாறு பொறுப்[புணர்வோடு வளர்க்கப்படாத காரணத்தால் பொருள் படைத்த பெற்றோரின் குழந்தைகள் சோம்பேறிகளாக மாறுவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர்களை சற்றும் மதிப்பதும் இல்லை. பெற்றோர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்கள்.
பெற்றோரைத் தங்களுக்கு பெரும் இடையூறாகவும் கருதுகிறார்கள். இரக்கம் என்பது இல்லாது போகும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் சேர்த்துக் குவித்த சொத்துக்களை விரைவில் அடைவதற்காக சிலர் “கருணைக் கொலை” என்ற பெயரில் கொன்றுவிடவும் செய்கிறார்கள். (உசிலம்பட்டியில் நடக்கும் இக்கொடுமை பற்றி மார்ச் மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்)
இன்னும் சிலரைப் பார்க்கிறோம். கணவனும் மனைவியும் இரவுபகலாக உழைத்துப் பொருள் சேர்த்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பார்கள்.
அவர்கள் அங்கு தன் மனம் விரும்பிய காதலனோடு அல்லது காதலியோடு உல்லாசமாக இருப்பார்கள் பெண்ணுக்கு கர்ப்பம் முற்றும்போது நிர்பந்தத்தால் அந்த கண்றாவியையே மனம் முடித்து காலகாலமும் சென்ற இடத்திலேயே செட்டில் ஆகியும் விடுகிறார்கள். பெற்றோர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை! இதற்காகத்தான் அப்பெற்றோர்கள் உழைத்தார்களா?
சரி, அப்படியே சென்ற இடத்தில் கைநிறைய சம்பாதித்து தாய்நாடு வந்து பெற்றோர் நிச்சயித்த நபரை மணமுடித்து மீண்டும் வெளிநாடு திரும்பியவர்களின் நிலைதான் என்ன? அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும்! ‘தாய்ப்பாசம்’ பொங்கும்! தாயை அழைத்து தங்களோடு தங்க வைப்பார்கள் பேரப்பிள்ளையின் மலத்தை சுத்தப்படுத்த!
பிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைப்பதற்காக வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெற்றோரும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் காதல் கூட்டாளிகளோடு ஓடிப்போனதால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தெருவுக்கு வந்த பெற்றோரும் உள்ளனர்.
இவையெல்லாம் இவ்வுலகில் சந்திக்கும் இழிநிலைகள்! மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது? நரகம் அல்லாமல் வேறு என்ன?எல்லாம் எதனால்? …. இறைவனையும் மறுமை என்ற உண்மையையும் மறந்து பொருளீட்டியதற்காக!