Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்! - Thiru Quran Malar

பெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்!

Share this Article

இஸ்லாம் பெண்களுக்கான் உரிமைகளை மறுக்கிறது என்று இஸ்லாத்தின் எதிரிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது. அவர்கள் தாங்கள் சார்ந்த மதங்களும் கொள்கைகளும், இசங்களும் இயக்கங்களும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளை வழங்குகின்றனவா என்பதை ஒப்பிட்டு நோக்கவே இப்பதிவு. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு அழகிய உரிமைகளை கொடுத்து அதை உலகெங்கும் தொடர்ந்து நடைமுறை படுத்தியும் காண்பித்து வருகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 

பிறப்புரிமை

பெண்ணா…? அவள் இவ்வுலகத்துக்கே வந்துவிடக்கூடாது என்று அவளை  கருவிலேயே கொன்றும் தப்பித் தவறி பிறந்துவிட்டால் அவள் வாயில் கள்ளிப்பால் ஊற்றியும் கொன்று விடும் கலாச்சாரம் அன்று போலவே  இன்றும் இருப்பதை உலகம் அறியும்.

இருந்தாலும் மதவாதிகளும் நாத்திகம் பேசும் பகுத்தறிவு கொள்கைக் காரர்களும் இவ்விடயத்தில் ஒன்றுமே செய்ய இயலாதிருப்பதை நாம் கண்டு வருகிறோம் ஆனால் இஸ்லாம் ஒன்று மட்டுமே இக்கொடுமையை உரிய முறையில் ஆன்மீக ரீதியாகவும் சட்டங்கள் இயற்றியும் தன்னம்பிக்கை வளர்த்தும் உலகெங்கும் தடுத்து வருகிறது.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்.  – திருக்குர்ஆன் 17: 31

விமர்சகர்கள் இந்த ஒரு உரிமையை தங்கள் பெண்களுக்குப் பெற்றுத்தர என்ன செய்கின்றனர் தங்களிடம் என்ன மாற்றுத் திட்டம் உள்ளது என்பதை சொல்லிவிட்டு மீதமுள்ள இஸ்லாம் வழங்கும் உரிமைகளைப் பார்க்கட்டும்.
கல்வியுரிமை

பெண் பிறப்பதே கேவலமாக எண்ணிய காலத்தில் கல்வி கற்கும் உரிமை கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கூறிய மடமையை ஒழித்து “சட்டங்கள் ஆழ்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று 20ம் நூற்றாண்டு கவிஞன் பாரதி சொல்லிவிட்டு போனார் .

ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கல்வியை கற்பது ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை என்று உரிமையையும் கடமையாக வலியுறுத்தி நடைமுறையும் படுத்தி வருகிறது. இஸ்லாம்.

அக்காலத்திலேயே சட்ட வல்லுனராக, மார்க்கம் கூறும் மேதையாக விளங்கிய பெண்மணி அன்னை ஆயிஷா அவர்களே இதற்கு சான்றாக விளங்குகிறார்கள்.திருமண உரிமை

“ஆயிரம் காலத்துப் பயிர்” என்றும் “சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்றும் பேசும் பெண்ணுரிமையை மறுத்த திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை “ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்” என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது.  

இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.

= ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)

மகன் கற்ற கல்விக்கும், அவனது அழகுக்கும் வட்டியுடன் கணக்கு போட்டு பைசா விடாது வாங்கும் வரதட்சணை என்ற கைக்கூலி வாங்கும்  வர்க்கத்தை திருத்தவும், பெண்களின் உரிமையை நிலை நாட்டவுமே இறைவன் இவ்வசனத்தை இறக்கியுள்ளான்.

விவாகரத்து உரிமை

திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை வந்தால் அவனை விட்டு விலகவும் இஸ்லாம் உரிமையினை அளித்துள்ளது. ஒவ்வாத கணவனோடு ஒட்டி தான் வாழ வேண்டும் என்றோ, அவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கி தான் போக வேண்டும் என்றோ கூறவில்லை.

‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற கோட்பாட்டுக்கு  மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி ‘குலா’ என்ற உரிமையை பெண்ணுக்கு வழங்கியுள்ளது மார்க்கம்.

சொத்துரிமை

பெண்ணுக்கு திருமணம் முடித்து கொடுத்த பின் பெண்ணை கைக்கழுவி விடும் பழக்கம் நாடெங்கும் இருப்பதை அறிவோம். மேலும் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமையை இன்றுதான் சில நாடுகள் சட்டம் போட்டு வழங்கத் துவங்கியுள்ளன. ஆனால் இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளாக இதை வழங்கி வருகிறது.

‘பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே’.     (திருக்குர்ஆன் 4: 7)

சம்பாதிக்கும் உரிமை

பெண் அவளுக்கு பாதுகாவலர் இல்லாத சமயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய அவள் சம்பாதித்துக் கொள்ளலாம். அவளுக்கு பொறுப்பாளர் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் சம்பாதிக்க செல்லலாம் என்ற சுதந்திர உரிமையை இஸ்லாம் கொடுத்து உள்ளது

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவனிடம் அவனது அருளை வேண்டுங்கள்! இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்     – (அல்குர்-ஆன் 4:32)

பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயம்,தோல் பதனிடுதல் போன்ற பணிகளையும் வியாபாரமும்  செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள்.குடும்பத்துக்காக சம்பாதிப்பதை ஆனின் மீது கடமையாக்கி பெண்ணை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கிறது இஸ்லாம்.

சாட்சியம் அளிக்கும் உரிமை

பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.

‘… (கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..”     – திருக்குர்ஆன் 2: 282

பர்தா பெண்ணடிமைத்தனமா?

இறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத பல விமர்சகர்கள் பர்தாவை அதாவது உடலை மறைக்கும் ஆடைக் கட்டுப்பாட்டை வைத்து இஸலாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் பெண்மையின் முக்கியமான பங்கை மறந்துவிடுவதே இதற்குக் காரணம்.

பெண்கள்தான் மனித சமுதாயத்தின் விளைநிலங்கள். குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கை யாரும் மறுக்கமுடியாது. ஆரோக்கியமான ஒழுக்கம் நிறைந்த சமூகம் அமைய வேண்டுமானால் பெண்மை என்பது புனிதமாகப் பேணப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

மாறாக அவளைக் காட்சிப் பொருளாக்கி. பொதுமக்களுக்கு விருந்து படித்தால் குடும்பங்களிலும் சமூகத்திலும் உண்டாகும் விபரீதங்களையும் அவலங்களையும் நாடறியும்.

‘… நபியே..நீர் கூறுவீராக! இறைவிசுவாசிகளான பெண்கள்,  தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்’.   திருக்குர்ஆன் 24: 31

என்று பெண்களுக்கு கற்பைக் கற்பிப்பது போலவே இறைவன் ஆண்களுக்கும் கற்பொழுக்கத்தை கற்பிப்பதைப் பாருங்கள். 

(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்;   நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  (திருக்குர்ஆன் 24:30)

ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் உடலமைப்புக்கும் ஏற்றவாறு அவரகளைப் படைத்த இறைவன் வழங்கும் உரிமைகளில் சிலவற்றையே நாம் மேலே கண்டோம். தனி நபர் வாழ்வயும், குடும்பவாழ்வும் சமூக வாழ்வும் சீர்கெடாமல் ஆரோக்கியமாக அமையவும மறுமையில் மோட்சம் பெறவும் இவை மூலமே முடியும். இவற்றை விடுத்து வேறு வழியுண்டா என்பதை விமர்சகர்கள் சிந்திக்கட்டும்! 

Share this Article

Add a Comment

Your email address will not be published.