Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பெண்குழந்தை என்ற அருட்கொடை - Thiru Quran Malar

பெண்குழந்தை என்ற அருட்கொடை

Share this Article

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே (பயன் தராமல்) நின்று விடுகின்றன.

1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள். (முஸ்லிம் 3358)

குழந்தைகளை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க இறைவன்,சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். “இறைவா, இது எனக்கு எப்படி கிடைத்தது?” என்று அவன் கேட்கும் போது, “உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால்தான்,” என்று இறைவன் விடையளிப்பான். (அஹ்மத் 10202)

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும். அதற்கு குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும். அதிலும் பெண்குழந்தை என்றால் அது பெரும் பாக்கியம்!

குழந்தைகளைக் கொல்வது பாவம்: பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது குழந்தைகளை கொன்று விடகூடாது. இறைவன் இவ்வாறு எச்சரிக்கிறான்:

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் (திருக்குர்ஆன் 17:31)


இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு இறைவன் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான். ஆணும் பெண்ணும் அவன் தருவதே! யாரையும் குறை காணகூடாது.

இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் இறைவன் நாடியவாறு தான் நாடியோருக்கு பரீட்சைகளை அமைக்கிறான். அதற்கேற்ப உறவுகளை அமைக்கிறான்…

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் குழந்தைகளை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகிறான். அல்லது ஆண்களையும்,  பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;  ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் 42:49,50)

(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

பெண் குழந்தைகளை வெறுப்பது குற்றம்!: தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை இறைவன் கடுமையாக சாடுகிறான்.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், இறைவன் பெயரால் இட்டுக் கட்டி, இறைவன் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர்வழி பெறவில்லை. (திருக்குர்ஆன் 6:140) என்று கண்டிக்கிற இறைவன், இன்னொரு வசனத்தில் கூறுகிறான்:


அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (திருக்குர்ஆன் 16:58)

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்வதோ இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.


பெண்குழந்தை வரவு ஓர்  நற்செய்தி:
மேற்படி வசனத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிறபோது அது ஒரு நற்செய்தி என்கிறான் அவளைப் படைத்தவன்! பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், இறைவன் அதை நற்செய்தி என்று சொல்வானா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: “வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள்.

மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் “இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும் இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்” அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127

 இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்!

Share this Article

Add a Comment

Your email address will not be published.