கருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ”மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
இறைவிசுவாசியின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை இறைநம்பிக்கையின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்:
நபித்தோழர் அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (ஆதார நூல்: முஃஜமுத் தப்ரானி)
இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும். பகையும் கருணைக்கு தடையல்ல இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்!
புனிதப்பள்ளியை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2).(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 5:8)
“உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 24:22) இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?