Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நபி (ஸல்) அவர்கள் எழுதிய மடல் ....... - Thiru Quran Malar

நபி (ஸல்) அவர்கள் எழுதிய மடல் …….

Share this Article

 

இது இறைவனின் பூமி. அவன்தான் இதன் முழு உரிமையாளன். அவன்தான் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக படைத்தான். இவ்வுலக மக்கள் அமைதியாக வாழ்வதற்காக ஒரு சிறந்த வாழ்க்கை நெறியையும் வகுத்து அளித்தான். ஒவ்வொரு காலத்திலும் மனிதர்களில் புனிதர்களைத் தேர்ந்தெடுத்து தன் தூதர்களாக நியமித்து அவர்கள் மூலம் மக்களுக்கு இதைப் போதித்து வழிகாட்டினான்.

அத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அந்த வாழ்க்கை நெறிதான் இன்று இஸ்லாம் (இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல்) என்று அறியப் படுகிறது.  முந்தைய இறைத்தூதர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களைப் போல் அல்லாமல் முஹம்மது நபி (ஸல்) உலகம் முழுமைக்குமாக அனுப்பப்பட்டவர் ஆவார்கள்.

உலகம் முழுமைக்கும் இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்கும் இந்த இறைவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டை எத்தி வைக்கும் பொறுப்பு இவர் மீது  இருந்தது.   இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் உயிர்வாழும் காலம் முழுதும் ”இஸ்லாம்” என்கின்ற உலக அமைதிக்கான கோட்பாட்டை அனைத்து மக்களூக்கும் எத்திவைப்பதில் கடுமையான கஷ்டங்களையும் தியாகங்களையும்  சந்தித்தார்கள்.

எதிர்ப்புகள் வரும் என்பதற்காக இறைவனின் செய்தியை எத்தி வைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அரசர்களோ படைபலமோ அவர்களின் வல்லமையோ அவரை அதிலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை.இறைத்தூதராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தனி மனிதராக தன் பயணத்தைத் தொடங்கினார்கள் நபிகள் நாயகம். இறைத் தூதை எத்தி வைக்கும்  தன் கடமையை பல தடைகளைக் கடந்து செவ்வனே நிறைவேற்றியதன் விளைவாக முதலில் மதீனாவும் பிறகு மக்காவும் இறையருளால் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தன. அதைத் தொடர்ந்து இறைத்தூதை உலக மக்களுக்கு எத்திவைக்கும் பணியை மேற்கொண்டார்.

அந்தத் தொடரில்தான் கடிதங்கள் மூலமும் அன்றைய பெரும்பெரும் அந்நிய நாட்டுச் சக்கரவத்திகளையும் அந்த ”இஸ்லாம்” என்கின்ற அமைதிக்கான கோட்பாட்டின் பக்கம் அழைப்புவிடுத்தார்கள்.
 

சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு நாட்டின் மக்கள் தலைவர் அன்றைய வல்லரசுகளாக இருந்த நாடுகளின் சக்கரவர்த்திகளுக்கு எந்தவிதமான தாழ்வுமனப்பான்மையோ தயக்கமோ இன்றி அவர் எழுதிய கடிதங்கள் அவை!. படைத்த இறைவனின் தூதர் அவர். படைப்பினங்களைப் பார்த்து பயப்படுவாரா?

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய அந்த கடிதங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர். இக்கடிதங்களை தன் தோழர்களைக் கொண்டு எழுதவைத்து தன் முத்திரையைப் பதித்து அனுப்புவது வழக்கம்.அவர்கள் அனுப்பிய கடிதங்களில் ஒன்றின் நகலைத் தான் இங்கு காண்கிறீர்கள்  புஸ்ராவின் ஆளுநர் மூலம் ரோமப் பேரரசை ஆண்ட  ஹிர்குலிஸ் மன்னருக்கு நபி(ஸல்) அனுப்பிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு இதோ:

“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹிர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக!
நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்களின் பாவமும் உம்மைச்சாரும்.
வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நம்முடைய இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக் கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயாமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகி விடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.”

(நூல்: புஹாரி,)

இதேபோன்ற கடிதங்களை ஹபஸ் நாட்டு மன்னர் நஜ்ஜாஸி அவர்களுக்கும் பாரசீக மன்னர் குஸ்ரூ எனும் கிஸ்ராவுக்கும்  பஹ்ரைன் மன்னர் முன்திர் அவர்களுக்கும் நபிகளார் அனுப்பினார்கள்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.