Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
திருந்திவாழ்வோர் இயக்கம் - Thiru Quran Malar

திருந்திவாழ்வோர் இயக்கம்

Share this Article

தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. இதைப்பற்றி நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கவலையே இல்லை. சுயநல அரசியல்வாதிகளுக்கும் அறவே கவலையில்லை. ஆனால் நாட்டுமக்களின் நலனில் நாளைய நமது தலைமுறைகளின் நலனில்  உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

மக்கள் இவ்வாறு வாழ்க்கையை வெறுக்கும் நிலை எப்படி உருவானது?முக்கியமாக மனிதன் சகமனிதனுக்கு செய்யும் அநியாயங்களே இதற்கு முக்கியமான காரணம் என்பதை நாம் அறியலாம். சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம்,  காவல்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம், ஆன்மீக போதனைகள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன.

எதைச்செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருப்பதால் நம்மைச்சுற்றி என்னென்ன கொடுமைகள் நடக்கிறது பாருங்கள்:

= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள். பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக் கொலைகள்.

= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்… பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,

= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.

= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.

= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள். 

= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.

= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்! (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு)

= மது, போதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!

இந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும் தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.  இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் வாழ்வதற்கே வெறுத்த நிலையை அடைந்து வருவதைத்தான் மேற்படி தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் (NCRB) அறிக்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

மக்கள் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் – குறிப்பாக இறைநம்பிக்கை கொண்டவர்கள் –  இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் ஆவன செய்யவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘உலகம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?’ என்ற அலட்சியப் போக்கு ஆபத்தானது.

‘இறந்த பின் நாம்  மண்ணோடு மண்ணாகத் தானே போகிறோம்’ என்று நம்புவோர் வேண்டுமானால் அவ்வாறு மெத்தனமாக உலகின்  விபரீதப் போக்கைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இறைவனையும் மறுமையையும் நம்பும் இறைநம்பிக்கையாளர்கள் அவ்வாறு இருக்க முடியாது.

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

எனவே தீமைகளைத் தடுத்து நன்மைகளை  ஏவும் பணியில் இறைநம்பிக்கை கொண்டோர் களமிறங்கியாக வேண்டும். அத்தகையவர்களைப் பற்றி இறைவன் சிறப்பித்துக் கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)

அமைதி திரும்ப மனமாற்றம் தேவை

தீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகக் கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:

அ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் மக்களிடையே பெருகி வருவது.

ஆ)  குற்றங்களைப் பற்றிய வெட்க உணர்வு மழுங்கி வருவது. தீமைகளைக் காண்போர் அவற்றை சொல்லாலோ செயலாலோ தடுக்காமல் இருப்பது அத்தீமைகளுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.

இ) சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மக்கள் சொந்த மனோ இச்சைப்படி முடிவு செய்வதால் அவரவர் செய்யும் தவறுகளையும் நியாப்படுத்தும் போக்கு.

சமூகத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் கீழ்கண்டவை நடைபெறவேண்டும்:

அ) மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். அவற்றிற்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மைகளை உணர்த்தி அவற்றை நல்வழிப்படுத்த வேண்டும். 

ஆ) சீர்திருத்தங்களை வெறும் போதனைகளோடு நில்லாமல் அன்றாட வாழ்வில் நடைமுறைப்  படுத்த வழிவகை செய்யவேண்டும். 

இ) அவ்வாறு திருந்துவோர் கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்வோடும் வாழ்வதற்கு   ஒருவருக்கொருவர் உறுதுணையாக இயக்கமாக செயல்பட வேண்டும்.

ஈ) சரி எது தவறு எது, பாவம் எது புண்ணியம் எது, நியாயம் எது அநியாயம் எது என்பவற்றை வரையறுக்கும் தெளிவான உறுதியான அளவுகோல் அல்லது சட்டங்கள் தேவை.  

உ) தீமைகள் மீண்டும் சமூகத்தில் ஊடுருவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் நம்மைப் படைத்த இறைவன் வழங்கும் வாழ்வியல் கொள்கையான இஸ்லாம் நிறைவு செய்வதை ஆராய்வோர் அறியமுடியும்.

 மனங்களின் சீர்திருத்தம்

 முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான், அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது.

அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.

இறையச்சம் என்ற பொறுப்புணர்வு 

இந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எந்த பாவங்களிலும் கூச்சமின்றி ஈடுபடுவான்.

அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..

= அறவே நிரூபிக்கப்படாத வெற்று மனித ஊகங்களைத் தொகுத்து பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுதல்.

= இறைவனின் தூதர்கள் போதித்தபடி  ‘படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி ‘இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுதல். 

அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். மேலே கூறப்பட்ட தீமைகளில் இருந்து மனிதன் விலகி நிற்பான்.

இறையச்சம் விதைக்க…

இந்த இறையச்சம் மனித மனங்களில் நிலைத்து இருக்கவேண்டுமானால் இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:

சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடியாக வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது.

இவ்வாறு வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக் காட்டி இவைதான் கடவுள் என்று கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன. 

 இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம், நிறம், இடம், மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.

இறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:

= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)

மறுமை நம்பிக்கை 

தெளிவான இறைநம்பிக்கைக்கு அடுத்தபடியாக  இந்த வாழ்க்கையைப்பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் பகுத்தறிவு பூர்வமான மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் கற்பிக்கிறது இஸ்லாம்.இன்று நாம் வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது.

இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும் தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம். இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும். இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.

மறுமை சாத்தியமா?

மறுமை வாழ்க்கை சாத்தியமா என்று மனிதனின் உள்ளத்தில் எழும் கேள்விக்கும் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது. மனிதன்  இல்லாமையில் இருந்து இந்திரியத்த துளியாகி தொடர்ந்து அவன் கடந்துவந்த கட்டங்களை நினைவூட்டி இறைவன் மனிதனை சிந்தித்து உணர வைக்கிறான்:

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று கேட்கிறான்.”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79) 

மேலும் தொடர்ந்து இறைவனின் வல்லமைகளை நினைவூட்டி மறுமைவாழ்வு என்பது சாத்தியமே என்பதை நிறுவுகிறான்:

”பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களப்  படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ”குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:80-82)  

நமது வினைகள் பதிவாகின்றனவா?

இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம்.  அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்ல, நமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

=மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள்(அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை  அவனோடு ஒட்டி  உறவாடிக் கொண்டிருப்பவை  அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும்.  ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும்  ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும்  அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும்  இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது.  இவற்றோடு தோல்களும் நம்  செயல்பாடுகளின்  பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று மேற்படி  வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது  அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது  அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக்  கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.

41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக் கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

இவை மறுமைநாளில் நமக்கெதிரான சாட்சிகளாக வரும் என்பதைத் திருக்குர்ஆனில் இறைவன் எச்சரிக்கிறான். இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப்  பாவங்கள் அண்ட வாய்ப்புகள் குறைவு. 

நடைமுறை வழிகாட்டுதல்

மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன்.

மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.இறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும்.

உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது.

மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன.

செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!

இவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு  மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் – பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள்.

இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள், தியாகங்கள், எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல், தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.