தன்மான உணர்வு கொள் தமிழா நீ!
தன்மான உணர்வு கொள் தமிழா நீ! உன்மானம் உலகறிய பறப்பது பார்! என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ!
உலகாளப் பிறந்தவனே உடன்பிறப்பே இணையில்லா இறைவன் ஒருவனன்றி! உனையாள ஒருவருக்கும் உரிமையில்லை மனையாளும் மங்கையுன் தெய்வமல்லம ன்னாதி மன்னரும் தெய்வமல்ல உனை உணர்ந்து செயல்பட நீ வா!
‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள் ‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் – புலிகள் சிறுத்தைகள் பூச்சாண்டிகள் கொள்கை இல்லா கும்பல்களின் தொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா!
தரை ஊரும் படர்கொடியா தமிழா நீ? தலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா! திரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே திராவிடங்கள் உனை வளர்த்த கதை இதுவே! புரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன் கரை சேர வழியுண்டு புறப்படு நீ வா!
திரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும் திராவிடங்கள் உனை மென்று உமிழ்ந்தது போதும் தீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும் சாதிக் கொடுமைகளை சகித்தது போதும் சாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா!
தனிமனித உரிமையும் உனக்குண்டு தரணியாளும் தகுதியும் உனக்குண்டு தன்மான உணர்வொன்று இல்லையெனில்…. தனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு? தரமான கொள்கையேதும் இல்லையெனில் தனி நாடே கைவரினும் என்ன பயன்?
தனி இனம் தனி மனிதப் புகழ்பாடி தரணியாளப் பிறந்தவனே தாழ்ந்து விட்டாய் தமிழன் என்ற வட்டத்தில் குறுகி விட்டாய் தரணியெங்கும் வாழ்வது நம் இனமே தமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே தவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா!
ஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான் ஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான் யாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான் யாவரையும் கேளிரென்று அனைத்ததும் தமிழேதான்! பாரெங்கும் உன்னுறவுகள் காத்திருக்க யார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று?
இனியோர் விதி செய்வோம் புறப்படு நீ! தனியே தமிழனென்று பிரியாமல் தரணியே நமதென்று வாழ்ந்திடுவோம்! தனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்! தன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்!
உனக்கிழிவு நீங்கிடுமே இமைப்பொழுதில்..
இன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே!
– உன் இஸ்லாமிய உடன்பிறப்புக்கள்