தனி மனித சீர்திருத்தம் எவ்வாறு?
மனிதன் தன்னைப்பற்றிய சில மறுக்கமுடியாத உண்மைகளை அடிக்கடி மறந்து விடுவதே அவன் பாவங்கள் செய்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானவை மூன்று. இவற்றை உரிய முறையில் அவனது பகுத்தறிவு ஏற்கும் வகையில் அவனுக்கு நினைவூட்டினால் அவனை சீர்திருத்த முடியும். நபிகளாரின் முன்மாதிரியில் இருந்தும் அதைத்தான் நாம் காண்கிறோம்.
இஸ்லாம் இந்த மூன்று உண்மைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் நாடுகளிடையே ஒற்றுமையையும் நிலைநாட்ட வழிகோலுகிறது.
1. ஒன்றே குலம்:
அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற உண்மையை திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு நினைவூட்டுகிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினரே என்ற உணர்வு மேலோங்கும்போது சக மனிதனை தனது சகோதரனாக சகோதரியாகப் பார்க்கும் பண்பு மனிதனுக்கு வந்துவிடுகிறது. அங்கு நிறத்தின், இனத்தின், மொழியின், நாட்டின் பெயரால் உடலெடுக்கும் பிரிவினைவாதங்களும் உயர்வு தாழ்வுகளும் கிள்ளி எறியப்படுகின்றன.
மாற்று மொழியினரும் நிறத்தவரும் அண்டை மாநிலத்தவரும் நம் சகோதரர்களே என்ற உணர்வு மக்களை ஆட்கொண்டால் இன்று நடக்கும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களையும் கலவரங்களையும் இல்லாமல் ஆக்கிவிடலாம்.
2.. ஒருவனே இறைவன்:
ஒன்றே மனிதகுலம் எனும்போது நம் அனைவருக்கும் இருப்பது ஒரே ஒரு இறைவனே என்பது தெளிவு. அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடியாக வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது.
இவ்வாறு வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக் காட்டி இவைதான் கடவுள் என்று கூறி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன.
இறைவன் அல்லாத கற்பனை உருவங்களுக்கோ உயிரும் உணர்வும் அற்ற படங்களுக்கோ சிலைகளுக்கோ எந்த இறைத்தன்மையும் கிடையாது என்றும் அவற்றை வணங்குவதோ அவற்றுக்கு மரியாதை செய்வதோ பெரும் பாவமாகும் என்றும் இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
3. இறைவனின் நீதிவிசாரனையும் மறுமை வாழ்வும்.
இன்று நாம் வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது. இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும் தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம். இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும். இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.மேற்படி நம்பிக்கைகளை வெறும் எண்ணத்தளவில் விட்டுவிடாது செயல்முறையில் கொண்டுவர ஐவேளைத் தொழுகை, ஜகாத் என்னும் கட்டாய தர்மம், ரமஜான் மாதத்தில் விரதம் போன்றவற்றைக் கடமைகளாக்கியுள்ளது இஸ்லாம்.
மட்டுமல்ல இவற்றைக் கூட்டாக இணைந்து நிறைவேற்றவும் பணிக்கிறது. அதனால் சமூக சீர்திருத்தமும் சமத்துவம் சகோதரத்துவம் பேணுவதும் எளிதாகிறது.இந்த நம்பிக்கைகளும் நடைமுறைகளும் சமூகத்தில் வேரூன்ற நாளடைவில் மொழி,நிறம், இடம், செல்வம் போன்ற எதுவும் மனித இனத்தைப் பிரிக்கமுடியாது. சமத்துவமும் சகோதரத்துவமும் தானாகவே சமூகத்தில் மலரும்.
நாட்டு வளங்களை சகோதர உணர்வோடும் இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் பங்கிட்டுக்கொள்ள மக்கள் தானாகவே முன்வருவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகளை இறைப்பொருத்தத்திற்காக மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்! அவ்வாறு மாநிலங்களுக்கு மத்தியில் பகைமை உணர்வுகள் மறையும். எல்லைக் கோடுகள் மறைந்து அகண்ட பாரதமும் உருவாகும்!
காலப்போக்கில் நாடுகளும் மறைந்து அனைத்து உலகும் ஒன்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவு நனவாகும்!
இது ஒரு மாயையோ அல்லது வெற்றுக்கோஷமோ அல்ல. இந்த நம்பிக்கையின் துளிகளை நீங்கள் உலகெங்கும் காண்கிறீர்கள். ஆம், உலகெங்கும் இக்கொள்கை பரவப்பரவ அதன் தாக்கத்தினால் ஒருகாலத்தில் ஜாதி, நிறம் இடம் போன்றவற்றால் பிளவுண்டு கிடந்த சமூகங்கள் பள்ளிவாசல்களில் அணியணியாக அணிவகுப்பதிலும் ஒரே சீருடையில் ஹஜ்ஜின் போது சங்கமிப்பதிலும் காண்கிறீர்கள்