செங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்!
பைபிளைப் படித்தவர்களும் ‘Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது மோசே என்ற இறைத்தூதரும் அவரைப் பின்பற்றிய மக்களும் பிர்அவ்ன் என்ற கொடுங்கோலனால் துரத்தப்பட இறைவனின் கட்டளையால் செங்கடல் இரு கூறாகப் பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது.
ஆனால் அவர்களைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்ற பிர்அவ்னும் அவனது படையினரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். இந்த வரலாற்றைக் கூறினால் நாத்திகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஆனால் இன்னும் இதை நம்பாத கிருஸ்துவர்களும் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதே உண்மை!ஆனால் இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் இந்த சம்பவம் நடந்தது உண்மை என்று கூறுகிறது. அதற்கான அத்தாட்சிகளையும் முன்வைக்கிறது!
கடல் எப்படிப் பிளந்து வழிவிடும் என்று மக்கள் வியப்படைவது இயல்பே. இதன் காரணமாகத்தான் கடல் பிளந்த வரலாற்றைக் கூறிய இறைவன் பிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து எதிர் காலத்துக்கு படிப்பினையாக்குவோம் (அல்குர்ஆன் 10:92) என்று கூறுகிறான். இறைவன் பாதுகாத்த அந்த தடயம் – பிர்அவ்னின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த அற்புத நிகழ்ச்சிக்குரிய வரலாற்றைத் தடயமாக அவனது உடல் அமைந்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட எலும்பிலிருந்து கார்பன் மாதிரிகளைப் பிரித்தெடுத்து ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு, இந்த எலும்புக்கூட்டின் வயது துல்லியமாகக் கண்டெறியப்படும் பரிசோதனைக்கு கார்பன் டேட்டிங் – கார்பன் தேதியாக்கம்- என்று கூறப்படும்.
கார்பன் சோதனை மூலம் ஆராயப்பட்ட உண்மை நிகழ்ச்சி
கடந்த நூற்றாண்டின் ஜெர்மன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி ஃபிர்அவ்னின் அழியாத உடம்பை கண்டெடுத்தனர். இந்த உடல் எப்பொழுது மரணித்தது என்பதை அவர்கள் அதே கார்பன் 14 சோதனை மூலம் ஆராய்ந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன் இறந்தவன் என்று அறிவித்து அல்குர்ஆன் கூறியதை மெய்ப்பித்தனர். ஃபிர்அவ்ன் உடலில் உள்ள கார்பன் 14 எவ்வளவு குறைந்துள்ளது என்பதை கணக்கிட்டு அவன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்று அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் அவன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (திருக்குர்ஆன் 10:90)
“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்..( திருக்குர்ஆன்:10-91)
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; (என்று அவனிடம் கூறப்பட்டது). நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 10:92)
அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பிர்அவ்னின் உடல் இன்று பத்திரமாக கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படுகிறது. அங்கு வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!
மனிதகுலத்துக்கான படிப்பினை
மனிதன் தன்னிடம், பணபலம், பொருட்பலம், படைபலம், ஆயுதபலம் போன்று எண்ணற்ற ஏதோ பலங்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில் எதனையும் செய்து விடலாம் என்ற மமதை, கர்வம், இறுமாப்பு போன்றவற்றுடன் செயல்பட ஆரம்பித்து விடுகிறான்.
நீதி, நியாயம், தர்மங்களைக் குப்பையில் தூக்கி வீசிவிடுகிறான். குழிதோண்டியும் புதைத்து விடுகிறான். தனது எண்ணத்துக்கும், நோக்கத்துக்கும் மாறான அனைத்தையும், நீதி, நியாயமோ, தக்க காரணங்களோ இன்றி அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கிவிடுகிறான். இப்படியான அநியாயங்களில் ஈடுபட்டோர் இறைவனால் அழிக்கப்பட்ட சரித்திரங்கள் பல. அவற்றில் இருந்து நாம் எதனையும் கற்றுக்கொண்டு உள்ளோமா எனப் பார்ப்போமாயின், இல்லை என்பதே பதில்..
இது இன்றுவரை தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. இதற்குப் பலியான நாடுகளும், சமூகங்களும், மனிதரும் நிறையவே உள்ளனர்.மோசே என்ற மூஸா நபி காலத்தில் இஸ்ரவேலர்களை அடிமைகளாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டு, தானே இறைவன் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தவனுக்கு இவ்வுலகில் கொடுத்த தண்டனையை ஞாபகப்படுத்தி, அதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைத் திருக்குர்ஆன் முன்வைக்கிறது.
இதில் தன்னைமீறிய சக்தி இல்லை என்ற இறுமாப்பில் வாழும் ஆட்சியாளர்களுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தன்னைத்தானே கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்று மோசடி செய்து வருவோருக்கும் எச்சரிக்கைகள் உண்டு. இறைவன் நாடினால் இயற்கை விதிகளை மீறி அற்புதகரமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் தன்னிடம் பிரார்த்திப்போருக்கும் உதவிக்கரம் நீட்டவும் செய்வான் என்பது இறைநம்பிக்கையாளர்கள் இங்கு பெறவேண்டிய பாடமாகும்.