Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் - Thiru Quran Malar

சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்

Share this Article

மனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா? யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே. அதை தன் இறுதிவேதம் மூலமாக மீண்டும் நினைவூட்டுகிறான்: 

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

மக்களை சுரண்டப் புறப்பட்ட ஆதிக்க சக்திகளும் இடைத்தரகர்களும்  இனம், நிறம், மொழி போன்றவற்றைக் காரணம் காட்டி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பித்தார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டார்கள்.

சிலர் தங்கள் இனமே உயர்ந்தது, தங்கள் இனத்தவர்களே கடவுளுக்கு மிக நெருங்கியவர்கள் என்றார்கள். சிலர் தங்கள் நிறத்தை, மொழியைக் காரணம் காட்டினார்கள். இவ்வாறு தன் சகோதர மனிதர்களை சுரண்டினார்கள், அடக்குமுறைகள் கையாண்டு கொடுமைப் படுத்தினார்கள்.

சுயநலத்துக்காக சக மனிதர்களின் உரிமைகளை மறுத்தார்கள். ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும் செய்தார்கள்.
சரித்திரம் முழுக்க அதுபோன்ற பற்பல நிகழ்வுகளால் நிறைந்திருந்தாலும் ஒருசில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம்.

ஏன் இவற்றை நினைவு கூருகிறோம்?

இன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர்.

அந்த அருட்கொடைகள்  மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் பிற மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கு இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.

காலனி ஆதிக்க சக்திகள் இழைத்த கொடுமைகள்:

மனித சரித்திரத்தில் சக மனிதன் தன் சகோதரனுக்கு இழைத்த கொடுமைகளில் மிகவும் ஈவிரக்கமில்லாதவை ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்துள்ளன. ஆயுத மேன்மை அடைந்தபோது அவர்களின் எண்ணமெல்லாம் எவ்வாறு இருந்தது தெரியுமா?

‘நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற  வேண்டும், அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும்.  நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும்.

கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பதாக இருந்தது. தீவிரமாக கடல்மார்க்கமாக வெவ்வேறு கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்கும்  பாதைகள் கண்டறிந்தார்கள்.

ஆயுத முனையில் அவ்விடங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த அப்பாவி மனிதர்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்கினார்கள். அடங்க மறுத்தோரை கொன்று குவித்தார்கள். நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் ஏராளம், ஏராளம். ஆயினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

அமேரிக்க குடியேற்றம்

அமெரிக்கா கண்டங்களுக்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்த கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள்.

அவர்களை அடிமைகளாகப் பிடித்து  ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீகரம் செய்தனர். கொலம்பசும்  அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் வெறும் 2 ஆண்டுகளில் மட்டும்தூக்கிலிட்ட,  கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது.

இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து  ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வெள்ளை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.

அட்லாண்டிக் சமுத்திரத்தின் கடலோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன.

 தங்களின் கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை விற்பதை போல விற்றார்கள். 

இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர் மக்கள் மீது படுகொலைகள், உயிருடன் எரிப்பு, ஏமாற்று வேலை,மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

10 கோடி பழங்குடிகளான  செவ்விந்தியர்களைக் காவு கொடுத்து அவர்களின் அதன்பின் உருவானதே இன்று நீங்கள் காணும் வெள்ளை தேசம் அமெரிக்கா!

அந்த அமரிக்காதான் இன்று உலகெங்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று “சமாதானம்” பேசிக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்.ஆனால் ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் முழுமையாக விசாரிப்புக்கு உள்ளாக இருக்கின்றன.

ஆம், மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான முறையில் நீதி வழங்குவான் இறைவன்:

= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).

Share this Article

Add a Comment

Your email address will not be published.