Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
கண்டிப்பதும் ஒரு கலையே! - Thiru Quran Malar

கண்டிப்பதும் ஒரு கலையே!

Share this Article

மாணவர்கள் அல்லது குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டித்துத் திருத்த வேண்டியது ஆசிரியர் மீதும் பெற்றோர் மீதும் கடமையாகும். அது போலவே தன் பொறுப்பில் அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்ட சிப்பந்திகளிடமோ அல்லது தொண்டர்களிடமோ தவறு காணும்போது அவர்களைத் திருத்த வேண்டியது அந்த நிறுவனத்தின் அல்லது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். அதை எவ்வாறு அழகிய முறையில் நிறைவேற்றுவது? அதுவும் ஒரு கலையே!

இறைவன் நமக்களித்த முன்மாதிரியாம் அண்ணல் நபிகளாரிடமிருந்தே பாடம் பெறுவோமே! அவர்  வாழ்வில்  நடந்த சில சம்பவங்களைப் பாருங்கள்:

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி)  அவர்கள்  கூறுகிறார்கள்:
இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு  கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ”இறைவா! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன்  சேர்த்து வேறு யாருக்கும்  நீ மன்னிப்பளிக்காதே!” என்று  சொன்னார். இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் உடனே சிரித்து  விட்டார்கள். ”இறைவனின் விசாலமான  தன்மைக்கு நீ தடை  விதிக்கின்றாயே!” என்று  கூறினார்கள். பிறகு அவர் பள்ளியின்  ஓரத்தில் ஆடையை அகற்றி  சிறுநீர் கழிக்கலானார்.   (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர்  உணர்ந்த பின்  என்னருகில் வந்து நின்று கொண்டு, ”அவர்கள்  கடுமையாக  எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று  சொன்னார்.   அப்போது நபி (ஸல்) அவர்கள்,”இது  பள்ளிவாசலாகும்.  இதனுள்  சிறுநீர்  கழிக்கப் படலாகாது.  இது இறைவனை நினைவு  கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே  கட்டப் பட்டுள்ளது” என்று  கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர  உத்தரவிட்டார்கள்.  அது  அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது. (நூல் :  இப்னுமாஜா 522)

இதுபற்றிய வேறு ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர்  கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர்.   நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டு விடுங்கள்.  அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி  தண்ணீரை  ஊற்றி விடுங்கள்.  நீங்கள் நளினமாக எடுத்துச்  சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள்.  கடினமாக  எடுத்துச் சொல்பவர்களாக  நீங்கள் அனுப்பப் படவில்லை” என்று  கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),   நூல் : புகாரி 220

பாருங்கள், பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து  விட்டதால் தன்னை நபி  (ஸல்)  அவர்கள்   கண்டிப்பார்கள்  என்று அந்தக் கிராமவாசி  எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது  போல் எதுவும்  நடக்கவில்லை.  அதே சமயம் அந்தக்  கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி அவர்கள் நளினத்தைப்  போதிக்கின்றார்கள்.

தவறு செய்த மாணவர்களை மற்றவர்கள் முன்னால் கடுமையாக அவமானப்படுத்தும்  பழக்கம்  பல ஆசிரியர்களுக்கு உண்டு.   அத்தகையவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்)  அவர்களின் இந்த  நடைமுறையில் அழகிய  படிப்பினை உள்ளது. தனது சிறு வயது முதலே  நபிகளாருக்குப் பணிவிடை செய்வதில்  ஈடுபட்டிருந்த அனஸ் (ரலி) அவர்கள்  கூறுகின்றார்கள்: 

இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் தமக்குப்  பணியாள் எவரும் இல்லாத நிலையில்  மதீனாவுக்கு வந்தார்கள்.  ஆகவே என் தந்தை அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்  கையைப் பிடித்துக் கொண்டு  இறைத்தூதர் (ஸல்)  அவர்களிடம்  அழைத்துச் சென்று, ”இறைவனின் தூதரே!  அனஸ் புத்திசாலியான சிறுவன்.  அவன்  தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள்.  ஆகவே  நான் நபி (ஸல்)  அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில்  இருக்கும்  போதும் பணிவிடைகள் செய்து  வந்தேன்.  நான் செய்த எந்தச்  செய்கைக்காகவும் ‘இதை ஏன் இப்படிச்  செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத  எந்த விஷயத்திற்காகவும் ‘இதை ஏன் நீ  இப்படிச்  செய்யவில்லை’ என்றோ என்னிடம்  நபி (ஸல்) அவர்கள்  கேட்டதேயில்லை. (நூல் : புகாரி 2768)

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்  பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப்  பத்தாண்டு  காலத்தில் ஏதேனும் பிசகுதல்  இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும்  நபி (ஸல்)  அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி  செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க  முடிகின்றது. அழகிய அணுகுமுறைகளை  உலகுக்குக் கற்றுத் தருவதற்காக  இறைவனால்  அனுப்பப்பட்ட ஆசிரியர் நபிகளார். அவர்களின் அழகிய கண்டிப்பு முறைக்கு இன்னோர் எடுத்துக்காட்டைப் பாருங்கள்:

ஒரு இறைவிசுவாசி தும்மினால் அவர்  அல்ஹம்து லில்லாஹ்  (புகழனைத்தும்  இறைவனுக்கே)  என்று கூறுவதும் அதைக்  கேட்டவர்  ‘யர்ஹமுகுமுல்லாஹ் – (இறைவன்  உங்களுக்கு அருள்  செய்வானாக)’ என்று  மறுமொழி கூறுவதும் நபிகளார் கற்றுத்  தந்த வழிமுறைகள். முஆவியா பின் ஹகம்(ரலி)  என்ற நபித்தோழர்  இவ்வாறு கூறுகிறார்கள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது  கொண்டிருக்கும் போது  கூட்டத்தில் ஒருவர்  தும்மினார். உடனே நான், ‘யர்ஹமுகுமுல்லாஹ்-  இறைவன் உங்களுக்கு அருள் செய்வானாக’  என்று சொன்னேன்.  உடன் மக்கள் என் மீது  தங்கள் பார்வைகளைச் செலுத்தினர்.  ”(உங்கள்) தாய்  தொலைந்து போகட்டும்!  உங்கள்  செய்தி  என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!” என்று நான்  கேட்டேன்.  அதற்கு நபித்தோழர்கள் என்னை  (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில்  கைகளால் அடித்துக் காட்டினர்.  அவர்கள்  என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள்  என்று அறிந்து  மவுனமாகி விட்டேன். இறைத்தூதர்   (ஸல்) அவர்கள்  தொழுது  முடித்ததும் கடுமையாகக்  கண்டிப்பார்கள் என்று நினைத்தேன். என் தாயும்  தந்தையும்  அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும்  ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும்பின்னரும் நான் கண்டதே இல்லை. இறைவன் மீதாணையாக!  அவர்கள் என்னை அரற்றவில்லை.  என்னை  அடிக்கவில்லை. என்னை ஏசவுமில்லை. ”நிச்சயமாக  இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல்  முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது  தஸ்பீஹ்  (துதிச்சொற்கள்), தக்பீர்(இறைவனைப்  பெருமைப் படுத்துதல்), குர்ஆன் ஓதுதல் என்பது  மட்டும்  அடங்கியதாகும்” என்று கூறினார்கள்.    (நூல் : முஸ்லிம் 836)

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின்  ஹகம் (ரலி)  தொழுகையில் தான் பேசிய  பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம்  சரியாக  வாங்கிக் கட்டப் போகின்றோம்  என்று கனமான   உள்ளத்தோடு  காத்திருக்கின்றார்கள்.  ஆனால்  நபி(ஸல்)  அவர்களோ  அவர் செய்த செயல்கள்  எதையும் கண்டனம்  செய்யவில்லை என்பதை  இங்கு காண்கிறோம்.  அதற்காக அந்தச் செயலை  நபி (ஸல்) அவர்கள் கண்டு  கொள்ளவில்லை  என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து  குற்ற உணர்வில்  கூனி குறுகிப் போயிருக்கும்  அவரிடம் இறைத்தூதர்  (ஸல்)  அவர்கள்  மேலும் அவற்றைச் சொல்லி குத்திக்  காட்ட  விரும்பவில்லை.   ஏனெனில் அவர்கள் நிச்சயமாக இறைவனின் தூதர்  ஆவார்கள்.   எதையும்  அளவுக்கு மீறி  கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும்  என்ற மனித உளவியல் ஓட்டத்தைப்  புரிந்த புனிதத் தலைவர் அவர்கள். அதனால்  உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச்  சொல்ல  வேண்டுமோ அதை மட்டும் சொல்லி   முடிக்கின்றார்கள்.
நன்றி: ஃபர்ஸான், இலங்கை

Share this Article

Add a Comment

Your email address will not be published.