Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பிறர்நலம் விழையும் ஜீவராசிகள் - Thiru Quran Malar

பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்

Share this Article

ஐந்தறிவு ஜீவிகளிடம் இருந்தும் மனிதன் பெறவேண்டிய பல பாடங்களை  திருக்குர்ஆனில் இறைவன் இடம்பெறச்செய்துள்ளான்.

எறும்பிடம் காணும் சமூகப் பொறுப்புணர்வு! 

இறைவன் தனது தூதர்களில் ஒருவரான சுலைமான் (சாலமன்) (அலைஹிஸ்சலாம் – அவர் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களுக்கு ஒரு சிறப்பு அருட்கொடையாக மாபெரும் அரசாட்சியும் பறவைகள், எறும்புகள் போன்ற ஐந்தறிவு ஜீவிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் வழங்கியிருந்தான். மட்டுமல்ல இவற்றையும், காற்று, ஜின் இனம் போன்றவற்றின் மீது தனி ஆற்றலையும் அவருக்கு வழங்கியிருந்தான்.ஒருமுறை சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது நடந்த சம்பவம் பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது:

27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி;) ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்;  ஸூலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று.

27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ”என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக,  நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகிறது. எறும்புகளிடம் வெளிப்படையாகவே காணப்படும் கூட்டுறவு, சுறுசுறுப்பு, உணவு சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பல பழக்கங்கள் அமைதியை விரும்பும் மனிதர்கள் கற்கவேண்டிய பாடங்களாகும். இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தில் திருப்தி கண்டு வாழும் சமூகத்திற்கு எறும்புகளின் கூட்டமைப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகத் திகழ்கின்றது. இத்தகைய கீழ்படிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று கூறுகிறோம்.மேற்படி சம்பவம் ஆபத்து என்று வரும்போது தனது சமூகத்தை எச்சரிப்பதும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பகிர்ந்து கொள்ளவேண்டியதும் நாம் இங்கு பெறும் பாடமாகும்.

மனித நிலை கண்டு கவலை கொண்ட மரங்கொத்தி!

இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான் (அலை) அவர்கள் தனது படையை பார்வையிட்டுக் கொண்டு வருகிறார்கள். அங்கே ஹுத் ஹுத் என்ற மரங்கொத்திப் பறவையைக் காணவில்லை. அது தாமதித்து வந்தது. இந்தப் பறவை தாமதித்து வந்ததற்கான காரணத்தை  வினவிய போது அந்தப்பறவை சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறியதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

27:22. (ஹுது ஹுது பறவையைக் காணாத சுலைமான்) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று; ”தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன்.  ‘ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

27:23. ”நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

27:24. ”அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸூஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழயிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

27:25. ”வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸூஜூது செய்து வணங்க வேண்டாமா?

27:26. ”அல்லாஹ் – அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்”” (என்று ஹுது ஹுது கூறிற்று).

இந்தச் செய்தியை கேட்டபின், அந்தப் பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் சத்தியத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர் அவர் இஸ்லாத்தில் இணைந்ததாக திருக்குர்ஆன் கூறுகின்றது.ஒரு நாட்டு மக்கள் அவர்களைப் படைத்த இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு அவனது படைப்பினங்களில் ஒன்றான சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டு அதைத் திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதை மேற்படி சம்பவத்தில் நாம் காண்கிறோம்.

இவ்வுலகைப் படைத்த இறைவனே மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக சூரியனையும் சந்திரனையும் இன்ன பிற கோள்களையும் உரிய முறையில் படைத்து பரிபாலித்து வருபவன். அனைத்துக்கும் முழுமுதற் காரணமான அவன் ஒருவன் மட்டுமே நமது வணக்கத்திற்கு உரியவன். நமது பிரார்த்தனைக்கு பதில் அளிக்கக்கூடியவன்,  என்பதை ஐந்தறிவு ஜீவிகள் வரை உணர்ந்துள்ளன என்பது இங்கு நாம் பெறும் முதல் பாடமாகும்.

மக்களை உரியமுறையில் இறைவன்பால் வழிகாட்ட வேண்டும் என்ற கவலை ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் இருந்துள்ளது. அதே கவலை  அந்த இறைத்தூதரின் சேவகனாகப் பணிபுரியும் அந்த ஜீவிக்கு கூட அதே கடமை உணர்வு இருந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.