ஏனிந்த வெறுப்புப் பிரச்சாரம் ?
இஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு திணிப்புக்கோ ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரயோகத்துக்கோ அவசியமில்லாத வகையில் இம்மார்க்கம் உலகில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இதை ஏற்றுக்கொண்டவர்கள் எதிரிகளின் சித்திரவதைகளுக்கு ஆளானாலும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்கிறது இறைவனின் மார்க்கத்தின் வெற்றிப்பயணம்!அது கற்பிக்கும் தெளிவான பகுத்தறிவு பூர்வமான கடவுள் கொள்கையும் மறுமை நம்பிக்கையும் மனித சமத்துவமும் வாழ்வியலும் மக்களை அதிகமதிகம் ஈர்த்து வருகிறது.
சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும், அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களும், நலிந்தவர்களும் தங்கள் துன்பங்களில் இருந்து தீர்வுகாண இஸ்லாத்தில் இணைகிறார்கள். படித்தவர்களும் பாமரர்களும் ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மொழியினருக்கும், நாட்டினருக்கும் ஒரேபோல வாழ்வியல் தீர்வுகள் இஸ்லாம் கூறுவதால் இதில் இணைவோரின் எண்ணிக்கை என்றும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது குறித்து இறைவன் கூறும் வாக்குறுதி பொய்யாக வாய்ப்பில்லையல்லவா?
‘தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால்இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 9:32)
தவறான சித்தரிப்பின் பின்னணி
ஆனால் இன்று ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் செய்திகளுக்கு பின்னணி என்ன? இஸ்லாத்தை பற்றிய இந்த மட்டகரமான சித்தரிப்புக்குக் காரணம் என்ன?இதைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட உண்மைகளை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்…
1. ரவுடிகள் தன் கையாட்களை வைத்துக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஊரை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளைகளை நடத்தி வருகிறார்களோ அதே விதமாக முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே தங்கள் கைப்பாவை அரசுகளையும் கையாட்களையும் அமர்த்தி உலகின் நலிந்த நாடுகளைக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
2. அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும் தங்கள் இராணுவ பலத்தால் கையகப்படுத்தியது மட்டுமல்ல, ஆங்காங்கே தங்கள் கம்பெனிகளை நிறுவி அந்தந்த நாட்டுமக்களின் உழைப்பின் கனிகளையும் கறந்து வருகிறார்கள் அவர்கள். முக்கியமான நுகர்வுப்பொருட்களின் (உதாரணமாக தேநீர், பற்பசை, சோப்பு, மருந்துகள்) விநியோகம் இவர்களின் பணமுதலைகளின் ஆதிக்கத்தில் இருப்பதைக் காணலாம்.
3. உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது.
(உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன)
4. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம்.
5. தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
6. இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)
7. அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள்.
உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்:
ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.இஸ்லாத்திற்கு ஏன் இவர்கள் எதிரியாகிறார்கள்? ஏன் இவர்கள் இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிக்கிறார்கள்?இன்று உலகெங்கும் இஸ்லாம் அதிவேகமாகப் பரவிவருவது இவர்களின் சுயநல திட்டங்களுக்கு தடைகளை உண்டாக்கி வருகின்றது.
இஸ்லாம் நீதியும் தர்மமும் பரவுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில் அதர்மத்துக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசர்களுக்கும் எதிராக திரும்புவது இந்த சுயநல சக்திகளின் உறக்கத்தைக் கெடுத்துவருகிறது.
மட்டுமல்ல இவர்களின் சொந்த நாடுகளிலும் (அமெரிக்கா, கானடா இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் போன்றவை) இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அதைத் தடுக்கவும் இவர்கள் பாடுபடவேண்டியுள்ளது. அதற்காக ஊடகங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்படியெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சித்தரிக்கிறார்கள்.
இன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் கொடூரங்களும் இஸ்லாத்தை உலகுக்கு முன் தவறாக சித்தரிப்பதற்காக இவர்களின் கைப்பாவை அமைப்புகளின் மூலம் நடத்தப்படுபவையாகவே தென்படுகின்றன. ஏனெனில் இஸ்லாம் எப்போதுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை சிந்திப்போர் அறிவார்கள்.
அண்மையில் வெளியான கார்டூன் ஐஎஸ்ஐஎஸ் அவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை சித்தரிக்கிறது.