Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
எளியோர் வறியோர் பற்றிய கவலை - Thiru Quran Malar

எளியோர் வறியோர் பற்றிய கவலை

Share this Article

வாரம் ஒருமுறை வெற்று அறிவுரைகளை மேடைகளில் நின்று தேனொழுக அல்லது வீராவேசமாக போதிப்பது… அதை மக்கள் காதுகுளிரக் கேட்டு ரசிப்பது….. தொடர்ந்து போதித்தவரும் சரி, கேட்டு ரசித்தவர்களும் சரி… இல்லம் சென்று சுவையான உணவருந்தி சுகமாக உறங்கி எழுகிறார்கள்.

மீண்டும் அடுத்த வாரம் இதே போதனைகளும் ரசிப்பும் உணவும் உறக்கமும் சுகமும் தொடர்கிறது. போதகர் சற்று குரல் வளமும் கவிநயமும் கொண்டவராக இருந்து விட்டால் அவர் அந்த ரசிகர்களின் ஹீரோ ஆகி விடுகிறார்.

இது போன்ற ஒரு கலாச்சாரம்  எப்படி இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களிடையே அமைய முடியும்?உதாரணமாக பள்ளிவாசலில் மிம்பர் (சிறு மேடை) மீது நின்று உரை நிகழ்த்துபவர், “அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார உண்பவன் இறைவிசுவாசி அல்ல!”  என்ற நபிமொழியை  (முஸ்னத் அபூயஃலா) எடுத்துரைக்கிறார்.

கீழே அமர்ந்து கேட்பவர்களும் கேட்டுவிட்டு உரை முடிந்ததும் பிரிந்து போகிறார்கள். பள்ளிவாசலைச் சுற்றியும் இவர்கள் தாங்கும் வீடுகளைச் சுற்றியும் பல எழைவீடுகள் இருக்கவே செய்கின்றன வறுமையும் இருக்கத்தான் செய்கிறது என்பதை போதித்தவரும் போதனையைக் கேட்டவர்களும் நன்கறிவார்கள்.

ஆனால் இவர்கள் இந்த  நபிமொழியை செயல்படுத்துவதற்கான வழிகளைப் யோசிக்கவோ கலந்தாலோசிக்கவோ அறவே முயலவில்லை என்றால் அந்த போதனையால் என்ன பயன்? இதுதான் இன்று நாட்டில் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. நமது சமூகப் பொறுப்புணர்வு என்பது அவ்வளவுதானா?    இன்று நாம் வாழும் நாட்டில் நமக்கு இருக்கும் பொறுப்பை வசனம் எடுத்துச் சொல்கிறது கீழ்கண்ட வசனம்:

=  மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட  (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;  இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ….  (திருக்குர்ஆன் 3:110)

வெற்று சடங்குகளைக் கொண்டது அல்ல இஸ்லாம். மாறாக இறைவனின்  போதனைகளை போதிப்பதும் சரி, அவற்றைக் கேட்பதுவும் சரி, மக்களிடையே அவை செயல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காகவே இருக்கவேண்டும்.

நம்மைச்சுற்றி ஏழைகளும் தேவைகள் உடையவர்களும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை பிறர்சொல்லி நாம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களைப்பற்றிய கவலை நம்முள் எழவேண்டும். நமது இறைநம்பிக்கைக்கான ஒரு உரைகல் அதுவாகும்.   

= (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.  அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.  மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (திருக்குர்ஆன் 107:1-7)

நமது தொழுகைகளும் குர்ஆன் ஓதுதலும் உபதேசங்களைக் கேட்டலும் நம்மை நற்செயல்கள் செய்வதற்குத் தூண்டவில்லையாயின் நமது இறைநம்பிக்கையை மறுபரிசோதனை செய்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

மக்கள் சேவை இறைவனை அஞ்சுவோர் மீது கடமை

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும்,தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,  உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (திருக்குர்ஆன் 76:8)

இஸ்லாம் இயம்பும் சமூக சேவையின் கோட்பாடு  (The Concept of Social Work in Islam).

கீழ்க்கண்ட வசனத்தில் பயபக்தியுடையவர்களின் குணநலன்களை இறைவன் தெளிவாக விளக்கியுள்ளான்:

= புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை.

ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும்,வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும்,  மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,வழிப்போக்கர்களுக்கும்,  யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்).

இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள்தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). ( திருக்குர்ஆன்2:177)

தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்புவது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (புகாரீ)

= இறைத்தூதரின் இன்னொரு கூற்று: ”சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவதும் தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமாகும்.” (புகாரீ, முஸ்லிம்).

Share this Article

Add a Comment

Your email address will not be published.