Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை - Thiru Quran Malar

இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை

Share this Article

உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை – இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள் பெருகுவதற்கும் காரணமாகிறது.

இவ்வாறு படைத்த இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவர்களை வணங்கும் செயல் இணைவைத்தல் எனப்படும். 

= உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு (seriousness) மனித உள்ளங்களில் இருந்து அகன்றுபோவதால் இறையச்சம் –அதாவது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வு மறைந்து போகிறது. அதனால் பாவங்களில் மக்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் பாவங்கள் பெருகவும் அதர்மம் ஆளவும் இது முக்கிய காரணம் ஆகிறது.

= படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவு இல்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை மக்கள் வணங்க முற்படும்போது இடைத்தரகர்கள் எளிதாக அங்கு நுழைந்து விடுகிறார்கள். அவரவர் கற்பனையில் உருவானவற்றைக் காட்டி இதுவே கடவுள் என்று கற்பித்து அதன்மூலம் மக்களை சுரண்ட இச்செயல் காரணமாகிறது..

= பல்வேறு மக்கள் அவரவர் கற்பனைக்கேற்ப கடவுளை சித்தரித்து வணங்கும்போது அதற்கேற்ப அவற்றை வழிபடுவோரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பாராட்டுவதற்கும் அடித்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.

= இன்னும் அகிலங்களின் அதிபதியும் சர்வவல்லமை கொண்டவனுமாகிய இறைவனை சிறுமைப்படுத்தும் செயலும் அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயலும் பொய்யுரைத்தலும் ஆகும்.இதை மிகப்பெரிய பாவம் என்று கூறுகிறது குர்ஆன். மேலும்,

= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


இணைவைப்போரின் மறுமை?

இப்பாவத்தை செய்வோரின் நிலை மறுமையில் எவ்வாறு இருக்கும்?மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இந்த பூமியில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அதில் இணைவைத்து வணங்கியவர்களும் இருப்பார்கள்.

யாரை இவர்கள் கடவுளாக பாவித்து அவர்களின் உருவச்சிலைகளை வைத்து வணங்கினார்களோ அவர்களும் அங்கு இருப்பார்கள். இன்னும் சிலர் இறந்துபோன நல்லடியார்களின் சமாதிகள் (உதாரணமாக தர்கா) அருகே நின்று அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து இருக்கலாம்  அவர்கள் யாவரும் அன்று விசாரணையின்போது வருவார்கள்.

இன்ன பிற இணைவைக்கப்பட்ட மற்ற அனைத்தும் விசாரணையின்போது ஆஜர். அப்போது என்ன நடக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறான்:

10:28. (இன்னும் – விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் – அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள் ”நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.

10:29. “நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்பது பொருள்)இவ்வுலகில் வாழ்ந்திருந்தபோது கண்மூடித்தனமாக நம்பியிருந்த கடவுளர்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புரியவரும். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதும் மறுமை என்பதே உண்மையானது நிலையானது என்பதும் தெளிவாகப் புரியவரும். இனி மீதமிருப்பது பாவிகளுக்கு விதிக்கப்படும் நரகமோ அல்லது புண்ணியவான்களுக்கு விதிக்கப்படும் சொர்க்கமோ மட்டும்தான் என்பதும் புரியவரும். ஆனால் அப்போது புரிந்துகொள்வது காலம்கடந்த பயனளிக்காத செயலாக இருக்கும். இவ்வுலகில் மக்கள் உண்மை இறைவனது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செய்த தங்கள் செயல்கள் நன்மைகளாகவும் அதற்கு மாறாக செய்த செயல்கள் தீமைகளாகவும் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காண்பார்கள்.

10:30. அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.

இவ்வுலகிலேயே திருந்துவோம்

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலைக் கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு அற்பமானதேயாகும்.) அறிவிப்பு : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)  நூல் :முஸ்லிம் (5490)

அதாவது மறுமை என்பது முடிவில்லாதது அதனோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடும்போது இம்மை வாழ்வு என்பது மிக மிக மிக அற்பமானது என்பதைத்தான் மேற்படி நபிமொழி நமக்கு எடுத்துரைக்கிறது. படைப்பினங்களைப் பற்றி சிந்தித்து அவனது வல்லமையையும் உள்ளமையையும் உணரச் சொல்கிறது குர்ஆன்.

மேலும் அன்றாடம் மனிதன் அனுபவிக்கும் அருட்கொடைகளைப் பற்றி நினைவூட்டி படைத்தவன்பால் மனம்திருந்தியவர்களாக திரும்பச் சொல்கிறான் இறைவன்:

= 10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

Share this Article

Add a Comment

Your email address will not be published.