நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்?
மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம்.
ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம்.
இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY)உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL)
ஆனால்,இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.
அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே,முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும்.
குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி,உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு,பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.]