Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை - Thiru Quran Malar

இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை

Share this Article

நமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து  தூதர்களையும் அவர்கள் மூலமாக  அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள்  நம்பிக்கை கொள்ள வேண்டும்.

3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(#முஸ்லிம் என்றால் இறைவனுக்கு சரணடைபவர்  என்று பொருள்) அந்த அடிப்படையில் இறுதி  இறைத்தூதர் #நபிகள் #நாயகம் (ஸல்)  அவர்களுக்கு முன்னர் வந்துசென்ற இயேசுநாதர்  பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டிய சில  முக்கியமான உண்மைகள் இவையே:

= இயேசுவின் வருகை பற்றி அன்னை  மரியாளுக்கு நன்மாராயம் கூறப்பட்டது.

வானவர்கள் கூறினார்கள். ‘“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;’

“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது (அல்குர்ஆன் 3:45-47)

(‘வார்த்தை’ என்றால் “ஆகுக” என்ற இறை கட்டளையே என்பதை  மேற்படி வசனத்தில்  இருந்து புரிந்து கொள்ளலாம்)

= இயேசு நாதர் (அலை) அனுப்பப்பட்டதன்  நோக்கம்:

#இயேசு நாதர் (அலை) இஸ்ரவேலர்களைப்  பார்த்துக் கூறினார்: –‘“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”

’‘“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.” (அல்-குர்ஆன்  3:50-51)

இயேசு நாதர் (அலை) அவர்கள் செய்த  அற்புதங்கள்:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)

= இயேசு நாதர் (அலை) அவர்களின் சீடர்கள்  இறைவனுக்குக் கீழ்படிந்தவர்களாகவே  (முஸ்லிம்களாகவே) இருந்தனர்.

அவர்களில் இறைமறுப்பு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.

“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (அல்-குர்ஆன்  3:52-53)

= இயேசுநாதரைக் கொல்லவந்தவர்களின்  சதி  முறியடிக்கப்பட்டது, விண்ணேற்றம்  செய்யப்பட்டார்.

இறைவன் கூறுகிறான்: -3:54-55.  (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

4:157-158.  இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.