Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள் - Thiru Quran Malar

அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்

Share this Article

அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மக்காவில் வேரூன்றிய இஸ்லாம் என்ற இறைமார்க்கம் இன்று உலகின் கால்வாசிக்கும் அதிகமானோரை ஈர்த்து நிற்கிறது. தன் வெற்றிப்பயணத்தை பற்பல எதிர்ப்புகளுக்கு இடையேயும் அயராது தொடர்கிறது. 

தனது தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமைகள்,  குடும்பக் கட்டமைப்பு, மனித உரிமைகள், சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் உலகெங்கும் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது.

 இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து வருகிறது. இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் அவ்வப்போது கையாளப் பட்டபோதிலும் அது சளைக்காமல் முன்னேறுகிறது.ஆனால் இம்மார்க்கம் இப்பூமியில் வேரூன்றுவதற்காக தொடக்க காலத்தில் உத்தம நபிகளாரும் அருமை நபித்தோழர்களும் மேற்கொண்ட தியாகங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவை.

 அவர்கள் அன்று மக்கா நகரின் மண்ணில் சிந்திய இரத்தமும் வியர்வையும் சதைத்துண்டுகளும் இஸ்லாம் என்ற மார்க்கம் உலகளாவிய நிலையில் வளர்வதற்கு உரமாக அமைந்தன. அவர்களின் தியாக வரலாறுகள் இம்மார்க்கத்தில் தொடர்ந்து இணைந்து வருவோருக்கு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்கின்றன.

மக்காவில் தொடங்கிய தியாக வரலாறு

இறைவனின் தூதராக நபிகளார் தேர்வு செய்யப்பட்ட பின் இறைவனின் ஆணையின் பேரில் நபி ஸல்) அவர்கள் மக்கா நகர மக்களுக்கு பகிரங்கமாக இஸ்லாத்தின்பால் அழைப்பை விடுத்தார்கள். நபிகளாரின் பிரச்சாரத்தைக் கேட்டு மக்கள் இந்த இயக்கத்தில் இணைவதைத் தடுக்க அன்றைய ஆதிக்க சக்திகள் பற்பல உத்திகளைக் கையாண்ட போதிலும் அவை தோல்வியைத் தழுவின. 

தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்கள் உணர்ந்தபோது அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். 

அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

= அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர்.

= தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார்.

= பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். 

பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான்.

= அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர்.

= நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி)  இறந்துவிட்டார்கள்.  வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

= அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர்.

= அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள்.

= கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். 

ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது இறைநம்பிக்கையும் மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய சத்தியமறுப்பாளர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.

= உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொயூரமாக வேதனை செய்தான். (இஸாபா)இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை.

எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது சத்தியமறுப்பாளர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். 

இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.