Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் - Thiru Quran Malar

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்

Share this Article

நாம் ஒவ்வொருவரும் பலருடைய அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகிறோம். முதன்மையாக நமது தாய். நம்மைப் பெற்றெடுத்தது முதல் நமக்காக அவர் பட்ட படும் கஷ்டங்கள் எழுத்தில் கொண்டுவர முடியாது. அதே போல நமது தந்தையும் நமக்காக செய்யும் தியாகங்களையும் குறைவாக மதிப்பிட முடியாது.

நம் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், என பலரிடமிருந்தும் அன்பின் வெளிப்பாடுகளை அனுபவித்தவர்களாக வாழ்கிறோம்.இவ்வாறு மனிதர்கள் தங்களுக்குள் காட்டும் அன்பு என்பது இல்லையென்றால் என்னவாகி இருக்கும்? சிந்தித்தோமா?

கற்பனை செய்து பார்க்கவே கடினமான ஒன்று! தாய் மனதில் தன் குழந்தையின் மீது பாசமென்ற ஒன்று இல்லாதிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? … பெற்ற குழந்தையை அப்பாடா, பத்து மாதம் பீடித்திருந்த சனியன் தொலைந்தது’ என்று சொல்லி அக்குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்திருப்பாள்.

நமக்கேன் வீண்சுமை? என்று சொல்லி தந்தையும் அதற்கு உடந்தையாய் இருந்திருப்பார். இவ்வாறே பிள்ளைகள், பெற்றோர், சகோதர சகோதரிகள், மற்ற உறவினர்கள் என ஒவ்வொரு உறவுகளுக்கும் இடையில் அன்பும் பாசமும் இல்லாதிருப்பின் அங்கு என்ன மீதமிருந்திருக்கும்? சுயநலம் ஆதிக்கம் கொண்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொள்ளும் நிலை அல்லவா இருந்திருக்கும்?

ஆக, நம்மை அப்படி ஒரு அவல நிலையில் இருந்து காப்பாற்றி மனித உறவுகளைப் பிணைத்து உயிர்பித்து வைக்கும் அன்பையும் பாசத்தையும் உருவாக்கியவன் யார்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய நமது இறைவனன்றி வேறு யார்? இதோ அந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் கேளுங்கள்:


இறைவன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன.

எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது. இதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5311 )


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன்,மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கி னால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன.

அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி5312) 


உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களி டம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதி களில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தை யைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)

அப்போது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா, சொல்லுங்கள்?” என்றார்கள். நாங்கள், “இல்லை; இறைவன் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (புகாரி 5315)

Share this Article

Add a Comment

Your email address will not be published.