Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்! - Thiru Quran Malar

அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!

Share this Article

ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நம் மீளுதல் என்ற இந்த உண்மைகளை  ஆழமாக விதைத்து மனிதன் இறைவனிடம் தன் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று வழங்கப்படும்.

 அப்படிப்பட்ட நம்பிக்கையோடு இறைவனை நேரடியாக வணங்கவும் துதிக்கவும் மக்களைப் பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறை உணர்வு பாவச் செயல்களில் இருந்து அவர்களைத் தடுக்கும்.

அப்போது அவர்கள் இணையம், செல்பேசிகள், தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். பிறர் உரிமைகளையும் உடமைகளையும் மதிப்பார்கள்.

துன்பங்கள் நேரும்போது சகிப்புத்தன்மையும் பிறருக்காக தன உடமைகளையும் தியாகம் செய்யும் மனப்பான்மை அங்கு வளரும். கல்வித்திட்டத்தில் இவற்றை உட்படுத்தினால் மாணவ மாணவிகள் கற்கும் கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவார்கள்.

சுயநலத்தை விட பொதுநலமே மிஞ்சும். கல்விப் பருவத்தில் குறுக்கிடும் காதல், பாலியல் வக்கிரங்கள், போதைப்பொருட்கள் போன்ற தீய சக்திகளின் தாக்கங்களில் இருந்து விடுபட்டு கருமமே கண்ணாக இருக்க இளைஞர்களுக்கு உதவும்.

தன் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்த விழிப்புணர்வோடு மாணவர்கள் வளர்வார்கள். தன்னம்பிக்கையும் ஆளுமையும் மேலிடுவதால் தோல்விகள் ஏற்படும்போது விரக்திக்கும் தற்கொலைகளுக்கும் ஆளாகமாட்டார்கள்.

வணிகர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் உள்ளங்களில் இவை விதைக்கப்பட்டால் வணிகமும் தொழிலும் சீர்பெறும், நியாயமும் நேர்மையும் அங்கு கோலோச்சும். மனித உரிமைகள் பரஸ்பரம் மதிக்கப்படும்.

குடும்ப அங்கத்தினர்களிடம் இவை விதைக்கப்பட்டால் பரஸ்பர நம்பிக்கை, உரிமைகள் பேணுதல், விட்டுக்கொடுத்தல்,  ஆதரவற்றோரை அரவணைத்தல், தியாக உணர்வு போன்ற பண்புகள் மிளிரும். குடும்ப உறவுகள் பலப்படும்.

குற்றவாளிகளிடமும் கைதிகளிடமும் இவை விதைக்கப்பட்டால் எந்த தண்டனைகளாலும் செய்யமுடியாத அற்புத சீர்திருத்தங்களை அங்கு செய்ய முடியும். அவர்கள் தன்னலம் மறந்த சமூக சீர்த்திருத்தவாதிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு.

காவல் துறையினரிடமும் நீதித்துறையினரிடமும் அரசு அதிகாரங்களில் உள்ளோரிடமும் இவ்வுண்மைகள் விதைக்கப்பட்டால் அவரவர் கடமைகளை சரிவரப் பேணவும் மாற்றாரின் உரிமைகள் பேணவும் தூண்டும் பொறுப்புணர்வு அவர்களில் வளரும்.

அதிகார துஷ்பிரயோகங்கள் இலஞ்ச ஊழல்கள், அரசு இயந்திரங்களை சுயநலத்துக்கு பயன்படுத்துதல் போன்றவை முடிவுக்கு வரும்.


இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் ஈடுபடும் மக்களிடம் இந்த மறுக்க முடியாத உண்மைகளை உரிய முறையில் விதைத்தால் அங்கே நிகழும் புரட்சிகளை யாரும் அனுமானிக்க முடியும்.

அதேபோல….. இன்றுள்ள அரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள்! ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள்! ….. அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரி 7138)

ஆம், மறுமை நாளில் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாதோருக்கு நரக நெருப்பின் வேதனையல்லவா காத்திருக்கிறது!ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம்.

ஆகையால் அவர்கள் இறைவனால் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின் குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே.

இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.

ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது.

இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு  முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர்.

அரசுக் கருவூலத்தின் செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல பின்வரும் தன் தலைமுறையினர் அனைவருக்கும் சட்டவிரோதமாக்கினார்.


அரசாங்கக் கருவூலத்தை சேர்ந்த பேரீத்தப்பழக் குவியலில் இருந்து தன் சிறுவயதுப் பேரன் ஹசன் எடுத்து வாயிலிட்ட ஒரு பேரீத்தம்பழத்தையும் ‘இது நமக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல, துப்பு துப்பு’ என்று கூறி துப்ப வைத்தார் அந்த மாமனிதர்! 

Share this Article

Add a Comment

Your email address will not be published.